
காதலனுடன் சேர மனைவியின் பயங்கர திட்டம்: நடைபயிற்சி சென்ற கணவருக்கு நேர்ந்த கோர முடிவு!
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கநேர் மாவட்டத்தில், திருமணம் முடிந்த மூன்றே மாதங்களில் கணவனை மனைவியே திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராவ்லா பகுதியைச் சேர்ந்த ஆஷிஷ் (27) என்ற இளைஞர், கடந்த ஜனவரி 30-ம் தேதி இரவு தனது மனைவி அஞ்சலியுடன் (23) இரவு உணவிற்குப் பிறகு நடைபயிற்சிக்குச் சென்றுள்ளார். அப்போது மறைந்திருந்த மர்ம நபர்கள் ஆஷிஷைத் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இது விபத்து மற்றும் கொள்ளை முயற்சி என அஞ்சலி நாடகமாடிய நிலையில், காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
விசாரணையில், அஞ்சலி கடந்த 7 ஆண்டுகளாக சஞ்சய் (25) என்பவரை காதலித்து வந்தது தெரியவந்தது. இவர்களது காதலுக்கு அஞ்சலியின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ஆஷிஷுடன் அவருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்குப் பிறகும் தனது கள்ளக்காதலைத் தொடர விரும்பிய அஞ்சலி, மேற்படிப்பிற்காகத் தனது கல்லூரி இருக்கும் ஊருக்குச் செல்ல அனுமதி கேட்டுள்ளார். ஆனால், கணவர் ஆஷிஷ் அதற்கு மறுப்பு தெரிவித்ததே இந்தக் கொலைக்கு உடனடி காரணமாக அமைந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் அம்ரிதா துஹான் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலையைச் செய்ய அஞ்சலி தனது கள்ளக்காதலன் சஞ்சயுடன் சேர்ந்து 16 நாட்களுக்கு முன்பே திட்டமிட்டுள்ளார். திட்டமிட்டபடி, சம்பவத்தன்று இரவு ஆஷிஷை ஆள் நடமாட்டமற்ற பகுதிக்கு அஞ்சலி நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு புதர்களுக்குப் பின்னால் சஞ்சய் மற்றும் அவரது நண்பர்களான ரோஹித், சித்தார்த் ஆகியோர் இரும்பு கம்பிகளுடன் காத்திருந்தனர். அஞ்சலி சிக்னல் கொடுத்தவுடன், மூவரும் சேர்ந்து ஆஷிஷை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அவர் மயங்கி விழுந்ததும், தப்பியோட வழி இருக்கக்கூடாது என்பதற்காக மப்ளரால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
கொலைக்குப் பிறகு, இது ஒரு கொள்ளை சம்பவம் போல காட்ட அஞ்சலி ஒரு கிரிமினல் நாடகத்தை அரங்கேற்றினார். தனது காதலர் சஞ்சயிடம் ஆஷிஷின் செல்போன் மற்றும் தனது தங்கக் கம்மல்களைக் கொடுத்து தப்பிச் செல்லுமாறு கூறியுள்ளார். பின்னர், சாலையோரம் தானும் மயங்கிக் கிடப்பது போல நடித்து, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் கணவர் உயிரிழந்ததாகவும், மர்ம நபர்கள் நகைகளைப் பறித்துச் சென்றதாகவும் அழுது துடித்துள்ளார். தொடக்கத்தில் இதனை விபத்து என்று நம்பிய போலீசாருக்கு, பிரேதப் பரிசோதனை அறிக்கை பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
ஆஷிஷின் உடலில் விபத்துக்கான காயங்கள் ஏதுமில்லை என்றும், அவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டே உயிரிழந்துள்ளார் என்பதும் பிரேதப் பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, அஞ்சலியின் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்தபோது அவர் சஞ்சயுடன் அடிக்கடி பேசியது அம்பலமானது. போலீசாரின் தீவிர விசாரணையில் அஞ்சலி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது அஞ்சலி, அவரது கள்ளக்காதலன் சஞ்சய் மற்றும் கொலையில் உதவிய நண்பர்கள் இருவர் என மொத்தம் நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Tags:
INDIAN NEWS