GO BACK

விமானத்தில் நடுவானில் பயங்கர மோதல்: இருவருக்கு வாழ்நாள் தடை விதித்தது பிரிட்டிஷ் நிறுவனம்

துருக்கியின் அந்தால்யாவிலிருந்து (Antalya) இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் 'ஜெட்2' விமானம் (LS896) புறப்பட்டது. சுமார் 30,000 அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, இரண்டு பயணிகள் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக்கொள்ளத் தொடங்கினர். மது அருந்தியிருந்த அவர்கள், சக பயணிகள் மீது இனவெறித் தாக்குதல்களை நடத்தியதாகவும், சிகரெட் வாங்க அனுமதிக்காததால் ஆத்திரமடைந்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் பின்னர் ஒரு பெரிய கைகலப்பாக மாறியது.

சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களில், விமானத்தின் நடுவே உள்ள பாதையில் பயணிகள் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்குவதும், ஒருவரை கழுத்தை நெரித்து (Headlock) சித்திரவதை செய்வதும் பதிவாகியுள்ளது. இந்த மோதலைத் தடுக்க முயன்ற விமானப் பணிப்பெண்கள் மற்றும் பிற பயணிகளுக்கும் தாக்குதல் நேர்ந்தது. "பயணிகளின் அலறல் சத்தத்தால் விமானமே போர்க்களம் போல காட்சியளித்தது" என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். நிலைமை மோசமடைந்ததால், விமானி பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் (Brussels) விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்கினார்.

விமானம் தரையிறங்கியதும் பெல்ஜியம் நாட்டு போலீசார் விமானத்திற்குள் புகுந்து, சண்டையிட்ட இரண்டு பயணிகளையும் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். அவர்கள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டபோது மற்ற பயணிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்தத் தடையற்ற வன்முறையைத் தொடர்ந்து, அந்த இரு பயணிகளும் இனி ஒருபோதும் தங்களது நிறுவன விமானங்களில் பயணிக்க முடியாது என 'ஜெட்2' நிறுவனம் வாழ்நாள் தடை விதித்து அறிவித்தது. மேலும், விமானத்தை மடைமாற்றியதற்காக (Diversion) ஏற்பட்ட பல லட்சம் ரூபாய் செலவையும் அந்த இருவரிடமிருந்தே வசூலிக்கப் போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

"ஒரு குடும்பப் பாங்கான விமான நிறுவனம் என்ற முறையில், பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் இத்தகைய கீழ்த்தரமான செயல்களை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என்று ஜெட்2 செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மற்ற பயணிகளிடமும் ஊழியர்களிடமும் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இந்தச் சம்பவம், விமானப் பயணங்களில் மது அருந்துவது மற்றும் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொள்ளும் பயணிகளுக்கு எதிரான சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலுப்படுத்தியுள்ளது.