நீங்க நடத்துறது கட்சி இல்ல.. வாட்ஸ்அப் குழு! - விஜய்க்கு அதிமுக கடும் பதிலடி!

சேலத்தில் இன்று நடைபெற்ற தவெக கூட்டத்தில் பேசிய விஜய், அதிமுக-வை மறைமுகமாகவும் நேரடியாகவும் விமர்சித்தார். "கட்சி ஆரம்பித்த அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரை மறந்துவிட்டீர்கள்; கட்சியை வளர்த்த ஜெயலலிதாவை மறந்துவிட்டீர்கள். என்னைப்போல தனியாகக் கட்சி தொடங்கி ஒரு சதவீத வாக்குகளை உங்களால் வாங்க முடியுமா?" என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு அதிமுக தற்போது மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுத்துள்ளது.

விஜய்யின் விமர்சனத்திற்குப் பதில் அளித்துள்ள அதிமுக, "கோவில் வாசலில் உடைக்கப்படும் தேங்காய் மூடிச் சிதறல்களைப் பொறுக்கி எடுப்பது போல, மற்ற கட்சிகளில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு 'கட்சி' என்ற பெயரில் ஒரு வாட்ஸ்அப் குழுவை (WhatsApp group) நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மற்ற கட்சிகளைச் சவாலுக்கு அழைப்பது நகைப்புக்குரியது" என்று சாடியுள்ளது.

விஜய்யை "பனையூர் பண்ணையார்" என்று குறிப்பிட்டுள்ள அதிமுக, "நீங்கள் அரசியலுக்குத் தனியாகவா வந்தீர்கள்? உங்கள் தந்தையால்தான் சினிமாவுக்கு வந்தீர்கள். ரஜினி மற்றும் விஜயகாந்தை அப்படியே 'காப்பி பேஸ்ட்' செய்து சினிமாவில் வளர்ந்தவர் நீங்கள். சொந்தமாக ஒரு வரி கூடப் பேசத் தெரியாத நீங்கள், அடுத்த கட்சிகளின் வரலாற்றுத் தலைவர்களின் புகழைத் (Legacy) திருடப் பார்க்கிறீர்கள்" என்று காட்டமாகக் கூறியுள்ளது.

அதிமுக-வின் நிறுவனத் தலைவர்களையும், ஜெயலலிதாவையும் அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் மறக்கவில்லை என்றும், அவர்களின் கொள்கை வழியிலேயே கட்சி பயணிப்பதாகவும் அதிமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியற்றது என்றும், அவர் மற்றவர்கள் எழுதித் தரும் வசனங்களைப் பேசி வருகிறார் என்றும் அதிமுக நிர்வாகிகள் விமர்சித்துள்ளனர்.

Previous Post Next Post

Contact Form