GO BACK

முதலில் திரிஷாவிடம் இருந்து வெளியே வாருங்கள்! - விஜய்யைச் சீண்டிய நயினார் நாகேந்திரன்.

சேலம் கூட்டத்தில் விஜய் பேசுகையில், அடுத்தவர்களின் முகவரியில் அரசியல்வாதிகளாக இருப்பவர்களுக்கு ஒரு சவால். என்னை மாதிரி தனியாக ஒரு கட்சி ஆரம்பித்து ஒரு சதவீத வாக்கு வாங்கி காட்டுகிற தில், திராணி இருக்கிறதா? என்று கேட்டிருந்தார். இதற்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுத்துள்ளார்.

விஜய்யின் சவால் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, நயினார் நாகேந்திரன் கூறியதாவது: "பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். அவர் முதலில் தனது வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். முக்கியமாக நடிகை திரிஷாவிடம் இருந்து வெளியே வர வேண்டும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடக்க முடியும். முதலில் தனது குடும்பத்துடன் நல்ல உறவை வைத்துக்கொள்ள வேண்டும்."

தவெக-வுக்கும் திமுக-வுக்கும் இடையில் மட்டுமே போட்டி என்று விஜய் சொன்னதை விமர்சித்த நயினார், "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தை ஏறி வைகுண்டம் போக முடியுமா?" என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டினார். ஒரு கவுன்சிலர் கூட இல்லாத கட்சி, 30 சதவீத வாக்குகள் வந்துவிட்டது என்று சொல்வது வெறும் சினிமாத்தனமான பேச்சு என்றும், அனுபவத்தில் பார்த்தால் மட்டுமே உண்மை தெரியும் என்றும் அவர் கூறினார்.

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களை மற்ற கட்சிகள் மறந்துவிட்டதாக விஜய் சொன்னதற்கும் நயினார் பதிலடி கொடுத்தார். "நல்ல தலைவர்கள் வழிநடத்திய இயக்கங்களைச் சிறுமைப்படுத்தக்கூடாது. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? வெறும் நடிகர் என்பதாலேயே 30 சதவீத வாக்கு இருப்பதாகச் சொல்வதை ஏற்க முடியாது" என்று அவர் காட்டமாகத் தெரிவித்தார்.