அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காளான்களைப் பறித்து சமைத்துச் சாப்பிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'டெத் கேப்' (Death Cap) எனப்படும் உலகிலேயே மிக நச்சுத்தன்மை வாய்ந்த காளான்களை, சாதாரணக் காளான்கள் எனத் தவறாகக் கருதி சாப்பிட்டதே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமாகியுள்ளது. மேலும், இதேபோல காளான்களை உட்கொண்ட 40-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கலிபோர்னியாவின் வடக்குக் கடலோரப் பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையைத் தொடர்ந்து அதிகப்படியான காளான்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன. இதனைப் பறிக்கச் சென்ற மக்கள், உணவிற்காகப் பயன்படுத்தப்படும் காளான்களுக்கும், உயிருக்கு உலையூட்டும் விஷக் காளான்களுக்கும் இடையிலான வேறுபாட்டை அறியாமல் இந்தத் தவற்றைச் செய்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
'அமானிட்டா ஃபல்லாய்டிஸ்' (Amanita phalloides) என்ற அறிவியல் பெயரைக் கொண்ட இந்த 'டெத் கேப்' காளான்கள், பார்ப்பதற்கு உண்ணக்கூடிய சில காளான் வகைகளைப் போலவே இருக்கும். இதில் உள்ள நச்சுத்தன்மை, மனித உடலின் செல்களை அழிக்கும் திறன் கொண்டது. ஒரு சிறிய காளானின் ஒரு பகுதி கூட ஒரு மனிதரைக் கொல்ல போதுமானது என்பது இதன் தீவிரத்தை உணர்த்துகிறது.
சமைத்தாலும் அல்லது வேகவைத்தாலும் இந்தக் காளான்களில் உள்ள விஷம் நீங்காது என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகள் உடனடியாகத் தோன்றாது; சில மணிநேரங்கள் அல்லது நாட்களுக்குப் பிறகே பாதிப்பு தெரியவரும் என்பதால், சிகிச்சை அளிப்பதிலும் பெரும் சவால்கள் ஏற்படுகின்றன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வனப்பகுதிகள் மற்றும் புல்வெளிகளில் தானாக வளரும் காளான்களைப் பறித்துச் சாப்பிட வேண்டாம் என கலிபோர்னியா சுகாதாரத் துறை பொதுமக்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முறையாகப் பயிற்சி பெற்ற வல்லுநர்களால் மட்டுமே இந்தக் காளான்களை அடையாளம் காண முடியும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
