GO BACK

டெல்லியில் அரங்கேறும் எப்ஸ்டீன் ரகசியங்கள்? தலைநகரை உலுக்கும் மனிதக் கடத்தல் மாஃபியா!

சர்வதேச அளவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ உலகப் பணக்காரர்களின் பாலியல் சுரண்டல்களை அம்பலப்படுத்தி வரும் நிலையில், இந்தியத் தலைநகர் டெல்லியில் அதே போன்றதொரு அதிர்ச்சியூட்டும் சூழல் நிலவுகிறது. 2026 ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் டெல்லியில் 857 பேர் மாயமாகியுள்ளனர் என்ற தகவல் இந்தியாவையே அதிரவைத்துள்ளது. இதில் 509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்பதுதான் பேரதிர்ச்சி. சராசரியாக நாளொன்றுக்கு 54 பேர் காணாமல் போகும் நிலையில், காணாமல் போன 191 சிறார்களில் 146 பேர் சிறுமிகள் என்பது டெல்லி எத்தகைய ஆபத்தான பிடியில் சிக்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது.

இந்தச் சம்பவங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள எஸ்.டி.பி.ஐ (SDPI) கட்சி, கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் டெல்லியில் சுமார் 2.3 லட்சம் பேர் காணாமல் போயுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதில் 52,000 வழக்குகளில் இதுவரை எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. குறிப்பாக, 2025-ல் மாயமான 24,500 பேரில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள். சட்ட அமலாக்கத் துறையின் மெத்தனமும், அமைப்பு ரீதியான தோல்வியுமே மனிதக் கடத்தல் மாஃபியாக்கள் சுதந்திரமாகச் செயல்படக் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை காணாமல் போனவர்களில் 235 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 572 பேரின் நிலை என்ன என்பது மர்மமாகவே உள்ளது.

குறிப்பாக, வேலையை முடித்துத் தாமதமாக வீடு திரும்பும் பெண்கள், தனிமையில் இருப்பவர்கள் மற்றும் சமூக-பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெண்களே இந்த மனிதக் கடத்தல் கும்பல்களின் பிரதான இலக்காகத் தேடிப் பிடிக்கப்படுகிறார்கள். பெண்களின் பாதுகாப்பை அடகு வைத்து அரசு மந்த நிலையில் இருப்பதை ஏற்க முடியாது என அரசியல் கட்சிகள் சாடி வருகின்றன. எப்ஸ்டீன் விவகாரத்தைப் போல இது உலகளாவிய கவனத்தைப் பெறாவிட்டாலும், டெல்லியின் வீதிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.