உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் (Bahraich) பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது ஒன்பது மாதக் கர்ப்ப காலத்தில் கணவனை இழந்த பெரும் சோகத்தில் இருந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரது கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், ஆதரவின்றித் தனியாக வசித்து வந்த அந்தப் பெண் கடும் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டபோது, கணவன் இல்லாத விரக்தியில் சமையலறை கத்தியை எடுத்துத் தனது வயிற்றைத் தக்னே கிழித்துக்கொண்டார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்தப் பெண்ணை மீட்டு உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தத் துயரமான நிலையிலும், அவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும், கத்தியால் ஆழமாகத் தனது வயிற்றைக் கிழித்துக்கொண்டதால் அந்தப் பெண்ணுக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டது.
அதிக ரத்த இழப்பு காரணமாக அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவர் மேல் சிகிச்சைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது மருத்துவர்கள் அவருக்குத் தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைத்துச் சிகிச்சை அளித்து வருகின்றனர். "பிரசவ வலியின் போது துணையாக இருக்க வேண்டிய கணவன் இல்லாத சோகமும், வறுமையும் அவரை இந்த விபரீத முடிவுக்குத் தள்ளியிருக்கலாம்" என அந்தப் பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்குக் குறிப்பாகக் கணவனை இழந்த பெண்களுக்குத் தேவையான உளவியல் ஆலோசனைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. அந்தப் பெண்ணின் உயிர் பிழைக்க வேண்டும் என்றும், அவரது குழந்தைக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
.jpg)