ரஷ்யா-உக்ரைன் போர்க்களத்தில் ரஷ்யப் படைகளுடன் இணைந்து போரிட்டு வீரமரணமடைந்த வடகொரிய வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், பியாங்யாங்கில் ‘சேப்யோல் வீதி’ (Saeppyol Street) என்ற புதிய அடுக்குமாடி குடியிருப்புப் பகுதி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 16 அன்று இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட வடகொரிய அரசு ஊடகம், அதிபர் கிம் ஜாங் உன் தனது மகளுடன் நேரில் சென்று இந்தக் குடியிருப்புகளைத் திறந்து வைத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. போரில் உயிரிழந்த ‘இளம் தியாகிகளின்’ குடும்பங்களுக்கு நாடு என்றும் கடமைப்பட்டிருக்கும் என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவிற்கு உதவும் வகையில் வடகொரியா சுமார் 11,000-க்கும் மேற்பட்ட வீரர்களை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதில் சுமார் 6,000 வீரர்கள் போர்க்களத்தில் உயிரிழந்திருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் எனத் தென்கொரிய உளவுத்துறை மதிப்பீடு செய்துள்ளது. வெளிநாட்டு மண்ணில் நடந்த போரில் உயிரிழந்த தங்கள் நாட்டு வீரர்களுக்கு இவ்வளவு பெரிய அளவில் கௌரவம் அளிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் உள்நாட்டில் நிலவக்கூடிய அதிருப்தியைப் போக்கி, ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு அரசு பாதுகாப்பாக இருக்கிறது என்ற செய்தியை கிம் ஜாங் உன் வழங்க முயல்கிறார்.
இந்த புதிய குடியிருப்பில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்கள் குடியேறும் நிகழ்வில் கிம் ஜாங் உன் நேரில் பங்கேற்று, சில வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். "தங்கள் தாய்நாட்டின் புனிதமான பாதுகாப்பிற்காக மிக உயர்ந்த தியாகத்தைச் செய்தவர்களின் குடும்பங்கள், எவ்விதக் குறையுமின்றி கௌரவமான வாழ்க்கை வாழ்வதை அரசு உறுதி செய்யும்" என்று அவர் உறுதியளித்தார். இந்தக் குடியிருப்புப் பகுதியில் நவீன வசதிகள் மற்றும் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவுடனான ராணுவ உறவை மேம்படுத்தியுள்ள வடகொரியா, அந்நாட்டிற்கு ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களையும் வழங்கி வருகிறது. இதற்குப் பிரதிபலனாக ரஷ்யாவிடமிருந்து தொழில்நுட்ப உதவிகள் மற்றும் பொருளாதார நன்மைகளை வடகொரியா பெற்று வருகிறது. உக்ரைன் போரில் வடகொரிய வீரர்களின் பங்களிப்பை இதுவரை ரகசியமாக வைத்திருந்த கிம் ஜாங் உன், தற்போது முதல்முறையாகப் பகிரங்கமாக வீரர்களுக்குக் குடியிருப்பு கட்டித் தந்து கௌரவித்திருப்பது சர்வதேச அரசியலில் முக்கியத்துவமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
.jpg)