Ads Top

விமானம் ஏற்றித் திருப்பி அனுப்பப்படும் அகதிகள்: பிரித்தானியா - பிரான்ஸ் இடையே நடக்கும் ரகசிய ஒப்பந்தம்!


பிரித்தானியாவிற்குச் சிறிய படகுகள் மூலம் வரும் ஒவ்வொரு அகதியையும் பிரான்சுக்குத் திருப்பி அனுப்பிவிட்டு, அதற்குப் பதிலாக சட்டப்பூர்வமான முறையில் மற்றொருவரைப் பிரித்தானியாவிற்கு அழைத்து வரும் 'ஒன்றுக்கு ஒன்று' (One in, one out) என்ற புதிய நடைமுறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை (வியாழக்கிழமை) மட்டும் டஜன் கணக்கான அகதிகள் விமானம் மூலம் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில், அவர்கள் அங்கே பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்சுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட அகதிகள் தங்களை ஒரு 'கால்பந்து' (Football) போல இரு நாடுகளும் கையாள்வதாகக் வேதனை தெரிவிக்கின்றனர். "பிரித்தானியா எங்களை மதிக்கவில்லை, பிரான்ஸ் பணம் வாங்கிக் கொண்டு எங்களை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அங்கே எங்களுக்குப் பாதுகாப்போ அல்லது தங்குமிடமோ இல்லை" என்று ஒரு அகதி தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். திருப்பி அனுப்பப்பட்டவர்களில் பலர் மீண்டும் கடத்தல்காரர்களின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளதாகக் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தத் திட்டம் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறுவதாக ஐநா நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாகச் சித்திரவதை மற்றும் ஆள் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் அதே ஆபத்தான சூழலுக்குத் தள்ளுவது "கொடூரமானது மற்றும் மனிதாபிமானமற்றது" என்று 20 பக்கங்கள் கொண்ட கடிதத்தில் ஐநா சுட்டிக்காட்டியுள்ளது. 17 வயது சிறுவர்கள் கூட வயது வந்தவர்களாகக் கருதப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிகழ்வுகள், இந்தத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை அம்பலப்படுத்தியுள்ளன.

இந்தத் திட்டம் அகதிகளின் வருகையைக் கட்டுப்படுத்தும் என்று பிரித்தானிய அரசு கூறினாலும், எதார்த்த நிலை வேறாக உள்ளது. பிரான்சுக்குத் திருப்பி அனுப்பப்பட்டவர்கள், அங்கே நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக மீண்டும் லாரிகள் அல்லது படகுகள் மூலம் பிரித்தானியாவிற்கு வரத் துடிக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, பல அகதிகள் பிரான்சுக்குத் திரும்பிய பிறகு மர்மமான முறையில் காணாமல் போயிருப்பது அவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Powered by Blogger.