திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நாஞ்சில் சம்பத், திமுக அரசு மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை வார்த்தைகளால் வறுத்தெடுத்தார். நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அதனால் அச்சம் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தனது உரையில் நாஞ்சில் சம்பத், "திமுக ஒரு மூடநம்பிக்கை. அது முஸ்லிம்களைக் காக்கத் தவறிவிட்டது. இஸ்லாமியர்களின் பாதுகாவலன் என்று சொல்லிக்கொள்ளும் திமுக, அவர்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அனைத்து கடற்கரை மக்களும், சிறுபான்மையினரும் இன்று தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டனர்" என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
மேலும், மற்ற கட்சிகளையும் விமர்சித்த அவர், "திமுகவிற்கு மாற்றாகத் தொடங்கப்பட்ட மதிமுகவை வைகோ திமுகவிடமே தொலைத்துவிட்டார். தேமுதிகவைத் துண்டு துண்டாக வெட்டிப் பிரேமலதா விற்கத் தயாராகிவிட்டார். டார்ச் லைட்டுடன் வந்த கமல்ஹாசன் இப்போது அறிவாலயத் தாழ்வாரத்தில் ஓய்வெடுக்கிறார். ஆனால், விஜய் அண்ணா மற்றும் எம்ஜிஆர் எழுதிய வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை எழுதப்போகிறார். த.வெ.க.வின் வளர்ச்சி இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது" என்று ஆவேசமாகப் பேசினார்.
தமிழகத்தில் ஆணவக் கொலைகள் மற்றும் போதைப் புழக்கம் அதிகரித்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், முதலமைச்சர் தனது 'மசில் பவரை' (தசை பலம்) காட்டி தவெக தொண்டர்களைத் தாக்க திமுக குண்டர்களை ஏவிவிடுவதாகப் புகார் தெரிவித்தார். "எங்கள் தலைவருக்கு மக்கள் பலம் (People Power) அதிகரித்து வருகிறது. எல்லா சாலைகளும் இனி பனையூரை நோக்கித்தான் செல்லும்" என்று கூறி தனது பேச்சை முடித்தார். நாஞ்சில் சம்பத்தின் இந்த அனல் பறக்கும் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
