Ads Top

ஒரு சாதாரண நபரை போல கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இளவரசர் அன்ரூ !

 

LONDON- 20-02-2026: பிரித்தானியாவில் இன்று வரை ஏன் சட்டம் ஒழுங்கு 95 சதவீகிதம் பாதுகாக்கப்படுகிறது என்றால், அது போலீசாரும் நீதித்துறையும் சரியாக இயங்குவதால்தான். பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டது கடந்த 450 வருடங்களில் நடந்ததே இல்லை. HRH என்ற பட்டம் அரச குடும்பத்தில் பிறந்த அனைவருக்கும் உரியதாகும். அது ஒரு பாதுகாப்பு கேடயம் என்று கூறலாம். குற்றமே செய்திருந்தாலும் அரச குடும்ப உறுப்பினர்களை உடனே போலீசாரால் கைது செய்ய முடியாது; அதற்கு அரச ஆணை தேவை.

இந்நிலையில், பாரிய குற்றங்களை இழைத்த எப்ஸ்டீனின் கோப்புகள் அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்டன. சுமார் 3 லட்சம் பக்கங்களைக் கொண்ட இந்த ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு வந்தன. இதில் பல புகைப்படங்கள், தகவல்கள், மின்னஞ்சல் பரிமாற்றங்கள் எனப் பல ஆயிரம் தகவல்கள் உள்ளன. இதில்தான் சிக்கிக்கொண்டார் பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ. அவர் ஒரு பெண்ணோடு இருக்கும் புகைப்படம், எப்ஸ்டீனுக்குச் சில பாதுகாப்பு ரகசியங்களை அனுப்பிய மின்னஞ்சல் மற்றும் எப்ஸ்டீன் தனி விமானம் மூலம் லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையம் வந்து செல்ல உதவியது ஆகிய இந்த 3 விஷயங்கள்தான் ஆண்ட்ரூவைப் பெரும் சிக்கலில் போட்டன.

இதனை அடுத்து மன்னர் சார்லஸ் அவர்கள், ஆண்ட்ரூவின் HRH பட்டத்தை முதலில் பறித்தார். பின்னர் அவர் தங்கியிருந்த மாளிகையை விட்டு வெளியேறுமாறு பணித்தார். பெட்டி படுக்கையோடு வின்ட்சர் மாளிகையை விட்டு மிகவும் கனத்த இதயத்தோடு ஆண்ட்ரூ வெளியேறி இருந்தார். இந்நிலையில் ஆண்ட்ரூவைக் கைது செய்ய வேண்டும் என்று போலீசார் மன்னர் சார்லஸிடம் அனுமதி கோரினர். அவர் அதற்கு ஒப்புக்கொண்ட நிலையில், நேற்று முன்தினம் இளவரசர் ஆண்ட்ரூவை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றார்கள். பிரித்தானியாவில் எவர் கைதானாலும் சரி, அது அந்நாட்டின் பிரதமராக இருந்தால் கூட, முதலில் போலீஸ் நிலைய சிறையில் அடைப்பார்கள்.

அதன் பின்னரே அவர்கள் என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்பதைத் தயாரித்து, ஆண்ட்ரூவைத் தனியான ஒரு அறைக்கு அழைத்துச் சென்று அவரிடம் வாக்குமூலம் பெறுவார்கள். இது முற்றிலும் வீடியோவாகப் பதிவு செய்யப்படும். பின்னரே போலீசார் தமது சொந்தப் பிணையில் ஆண்ட்ரூவை வெளியே செல்ல அனுமதிப்பார்கள். மீண்டும் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஆண்ட்ரூ போலீஸ் நிலையம் வந்து சரணடைய வேண்டும். அன்று மீண்டும் ஒரு விசாரணை நடக்கும். ஆனால் அந்த இரண்டாவது விசாரணைக்கு முன்பாகவே ஆண்ட்ரூ குற்றவாளியா இல்லையா என்று போலீசார் ஒரு முடிவுக்கு வருவார்கள்.

No comments:

Powered by Blogger.