GO BACK

‘‘உலகுக்கான இந்தியாவின் கொடையே தமிழ் மொழி!’’ - மலேசியாவில் பிரதமர் மோடி


‘‘உலகுக்கான இந்தியாவின் கொடையே தமிழ் மொழி!’’ - மலேசியாவில் பிரதமர் மோடி புகழாரம்!

2026-ஆம் ஆண்டின் தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக மலேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள கோலாலம்பூரில் சுமார் 12,000 இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். அப்போது தமிழ் மொழியின் தொன்மை மற்றும் சிறப்பினைப் போற்றிய அவர், "தமிழ் மொழி என்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிற்கே இந்தியா அளித்த மாபெரும் பரிசு" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தமிழ் இலக்கியங்கள் காலத்தால் அழியாதவை என்றும், தமிழ் கலாச்சாரம் உலகளாவியது என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

மலேசியாவில் சுமார் 30 லட்சம் இந்திய வம்சாவளியினர் வசித்து வருவதையும், அவர்களில் பெரும்பான்மையானோர் தமிழர்கள் என்பதையும் சுட்டிக்காட்டிய பிரதமர், அவர்கள் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு 'உயிருள்ள பாலமாக' (Living Bridge) செயல்படுவதாகக் கூறினார். மேலும், மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவர்களுக்குத் தமிழ் பாடல்கள் மீதுள்ள தீராத ஆர்வத்தையும், குறிப்பாகப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாடல்கள் மீது அவருக்கு இருக்கும் பிரியத்தையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

தமிழின் சிறப்பைப் போற்றும் விதமாக, மலேயா பல்கலைக்கழகத்தில் 'திருவள்ளுவர் இருக்கை' (Thiruvalluvar Chair) ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை நினைவு கூர்ந்த பிரதமர், தற்போது நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்த மலேசியாவில் ஒரு 'திருவள்ளுவர் மையம்' (Thiruvalluvar Centre) அமைக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டார். இதுமட்டுமின்றி, மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில ஏதுவாக 'திருவள்ளுவர் கல்வி உதவித்தொகை' (Thiruvalluvar Scholarship) வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்ற தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் தங்களின் திறமையால் மனிதகுலத்திற்குச் சேவை செய்து வருவதை அவர் உதாரணமாகக் காட்டினார். மலேசியாவில் உள்ள 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் மொழியைப் பாதுகாப்பதில் ஆற்றி வரும் பங்கினையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.

வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் மலேசியா இடையிலான உறவை 'IMPACT' (India Malaysia Partnership for Advancing Collective Transformation) என்ற சொல்லின் மூலம் பிரதமர் விளக்கினார். இந்த உரை மலேசியாவில் உள்ள தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், தமிழ் மொழியின் பெருமையை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.