ஜப்பான் கடல் எல்லையில் சீனக் கப்பல் சிறைபிடிப்பு: கேப்டன் கைது! இரு நாடுகளிடையே மீண்டும் வெடிக்கும் மோதல்?

ஜப்பானின் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) அத்துமீறி நுழைந்த சீன மீன்பிடிக் கப்பலை ஜப்பான் கடலோரக் காவல் படை சிறைபிடித்துள்ளது. ஜப்பானின் தென்மேற்கு நாகசாகி மாகாணத்தில் உள்ள மெஷிமா தீவில் இருந்து சுமார் 165 கி.மீ தொலைவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கப்பலை ஆய்வு செய்ய ஜப்பான் அதிகாரிகள் உத்தரவிட்டும், அதற்குக் கீழ்ப்படியாமல் தப்பிச் செல்ல முயன்றதால், 47 வயதான சீனக் கேப்டனை ஜப்பான் மீன்வளத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்தக் கப்பலில் மொத்தம் 10 பேர் இருந்துள்ளனர். இந்தக் கப்பல் அதிக அளவிலான மீன்களைப் பிடிக்கும் வசதி கொண்டிருப்பதால், ஜப்பான் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட முயன்றதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். கடந்த 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு சீனக் கப்பல் ஒன்று ஜப்பானால் சிறைபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதால், இது இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவில் மேலும் விரிசலை உண்டாக்கும் என அஞ்சப்படுகிறது.

ஜப்பானின் புதிய பிரதமர் சனா டேகைச்சி (Sanae Takaichi), "சீனா தைவான் மீது தாக்குதல் நடத்தினால் ஜப்பான் ராணுவம் தலையிடும்" என்று கடந்த நவம்பரில் அறிவித்ததில் இருந்தே சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இதற்குப் பதிலடியாகச் சீனா, ஜப்பானிய கடல் உணவுகளை இறக்குமதி செய்யத் தடை விதித்துள்ளதுடன், ரஷ்யாவுடன் இணைந்து ஜப்பான் அருகே ராணுவப் பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.

இந்தக் கைது நடவடிக்கை குறித்துப் பேசிய ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளர் மினோரு கிஹாரா, "அந்நியக் கப்பல்கள் ஜப்பான் கடல் எல்லைக்குள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை எடுப்போம்" என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் சீனா இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கவில்லை என்றாலும், தனது குடிமகன் கைது செய்யப்பட்டிருப்பதற்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Previous Post Next Post

Contact Form