GO BACK

ஐரோப்பாவில் தீவிரமடையும் இஸ்ரேலிய புறக்கணிப்பு! - முடங்கும் வர்த்தகம்; கலக்கத்தில் இஸ்ரேலிய நிறுவனங்கள்!

இஸ்ரேலிய தயாரிப்புகளுக்கு எதிரான புறக்கணிப்புப் போராட்டங்கள் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் மிகவேகமாகப் பரவி வருகின்றன. குறிப்பாக அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் ஸ்லோவேனியா போன்ற நாடுகள் இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குத் தடை விதிக்கும் சட்டங்களை அமுல்படுத்தத் தொடங்கியுள்ளன. இது வெறும் சமூகப் போராட்டமாக மட்டுமன்றி, தற்போது அரசாங்கங்களின் உத்தியோகபூர்வக் கொள்கையாகவும் (Official Policy) மாறி வருவது சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்து கடந்த ஜூன் 2025-ல் கொண்டு வந்த புதிய சட்டத்தின்படி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளிலிருந்து வரும் பொருட்கள் சட்டவிரோதமானவையாகக் கருதப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து ஸ்பெயினும் டிசம்பர் 2025 முதல் இத்தகைய தயாரிப்புகளுக்குத் தடை விதித்துள்ளதுடன், இஸ்ரேலுடனான ஆயுத வர்த்தகத்தையும் முழுமையாக நிறுத்தியுள்ளது. இத்தகைய அரசியல் நகர்வுகள் ஐரோப்பாவின் மற்ற நாடுகளையும் இதேபோன்ற முடிவுகளை எடுக்கத் தூண்டி வருகின்றன.

பொருளாதார ரீதியாக, இந்தத் தடைகளால் இஸ்ரேலின் விவசாயம் மற்றும் தொழில்நுட்பத் துறைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியமானது இஸ்ரேலின் மொத்த வர்த்தகத்தில் சுமார் 32% பங்கைக் 

கொண்டுள்ள நிலையில், இந்த விலகல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஜேர்மனியின் 'Aldi' போன்ற முன்னணி சில்லறை விற்பனை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் எதிர்ப்பிற்குப் பயந்து இஸ்ரேலிய உருளைக்கிழங்கு மற்றும் பழங்களின் இறக்குமதியைக் கணிசமாகக் குறைத்துள்ளன.

வர்த்தகத்தைத் தாண்டி கலாச்சார ரீதியாகவும் இந்த எதிர்ப்பு நீண்டுள்ளது. அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நான்கு நாடுகள் 2026-ஆம் ஆண்டுக்கான யூரோவிஷன் (Eurovision) பாடல் போட்டியில் இஸ்ரேல் பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளன. இத்தகைய கூட்டுப் புறக்கணிப்புகள் இஸ்ரேலிய பிராண்டுகளின் நற்பெயருக்கு சர்வதேச சந்தையில் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.