தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட இந்தியா: 240 ரன்கள் குவித்து இமாலய வெற்றி! சஞ்சு சாம்சன் புறக்கணிப்பு?
2026 டி20 உலகக் கோப்பை திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நாளை மறுநாள் (பிப்ரவரி 7) தொடங்கவுள்ள நிலையில், நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை துவம்சம் செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடி 240 ரன்கள் குவித்து, தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை திணறடித்தது. உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பே இந்திய அணி காட்டியுள்ள இந்த விஸ்வரூபம், மற்ற அணிகளுக்கு ஒரு கடும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
இந்த ஆட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது சஞ்சு சாம்சனின் புறக்கணிப்புதான். தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அபிஷேக் சர்மாவுடன் இஷான் கிஷன் ஓபனராக களம் கண்டார். கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இஷான் கிஷன், மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர்களை பறக்கவிட்டார். வெறும் 20 பந்துகளில் 7 சிக்சர்களுடன் அரைசதம் கடந்து அவர் ஆடிய ஆட்டம், ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்தது.
இஷான் கிஷனைத் தொடர்ந்து களம் புகுந்த திலக் வர்மாவும் தனது பங்கிற்கு தென்னாப்பிரிக்க அணியை வறுத்தெடுத்தார். வெறும் 19 பந்துகளில் 45 ரன்கள் குவித்து மிரட்டிய அவர், அணியின் ஸ்கோர் 240-ஐ எட்ட முக்கிய காரணமாக இருந்தார். அபிஷேக் சர்மாவும் அதிரடி காட்டிய நிலையில், இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் அபாரமான ஃபார்மில் இருப்பதை இந்தப் போட்டி உறுதிப்படுத்தியுள்ளது. சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்படாதது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தாலும், இந்திய அணியின் அதிரடி வெற்றி அதை சற்றே மறைத்துள்ளது.
இந்திய அணி நிர்ணயித்த 241 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்க அணியால், இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தோல்வியைத் தழுவியது. உலகக் கோப்பை தொடர் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இந்தப் பெரிய வெற்றி இந்திய அணிக்கு கூடுதல் நம்பிக்கையைத் தந்துள்ளது. பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறவுள்ள இந்த 20 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை தொடரில், இந்திய அணி கோப்பையை வெல்லும் முனைப்பில் இருப்பதை இந்தப் பயிற்சி ஆட்டம் தெள்ளத்தெளிவாகக் காட்டியுள்ளது.
