ஜெர்மனியின் வெய்சன்ஹாஸ் நகரில் உலகப் புகழ்பெற்ற 8 கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்கும் ஃப்ரீஸ்டைல் செஸ் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ரவுண்ட்-ராபின் சுற்றின் 6-வது ஆட்டத்தில், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி - நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் மோதினர். ஃப்ரீஸ்டைல் செஸ் (Chess960) என்பது காய்கள் ஆரம்பத்திலேயே வழக்கத்திற்கு மாறான இடங்களில் அடுக்கி வைக்கப்படும் ஒரு முறையாகும். இதில் கார்ல்சனை வீழ்த்துவது கடினம் எனக் கருதப்பட்ட நிலையில், அர்ஜுன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஆக்ரோஷமாக விளையாடிய அர்ஜுன், கார்ல்சனை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கினார். கார்ல்சனின் ஒவ்வொரு நகர்வுக்கும் ஈடுகொடுத்த அர்ஜுன், வெறும் 28-வது நகர்விலேயே கார்ல்சனை சரணடைய வைத்தார். கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப்பில் கார்ல்சனிடம் தோல்வியடைந்ததற்கு, அர்ஜுன் இந்த வெற்றியின் மூலம் இனிப்பான பழிதீர்த்துள்ளார். அர்ஜுனின் இந்த வெற்றி சர்வதேச செஸ் உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார்ல்சன் மற்றும் வின்சென்ட் கீமர் ஆகிய பலமான வீரர்களை வீழ்த்திய போதிலும், அர்ஜுன் எரிகைசியால் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. லீக் சுற்றில் விளையாடிய 7 ஆட்டங்களில் 3 வெற்றி மற்றும் 4 தோல்விகளுடன் அவர் 6-வது இடத்தைப் பிடித்தார். புள்ளிகள் அடிப்படையில் அவர் அரையிறுதி வாய்ப்பைத் தவறவிட்டாலும், உலக சாம்பியனான கார்ல்சனை வீழ்த்தியது இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது.
லீக் சுற்றின் முடிவில் மேக்னஸ் கார்ல்சன் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். இன்று (பிப்ரவரி 15) நடைபெறும் இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் ஃபேபியானோ கருவானா மோதவுள்ளனர். அதே வேளையில், 5-வது இடத்திற்கான வகைப்படுத்தும் போட்டியில் அர்ஜுன் எரிகைசி, அமெரிக்காவின் ஹான்ஸ் நீமனை எதிர்கொள்ள உள்ளார்.
.png)