அண்மையில் வெளியான சுமார் 30 லட்சம் பக்க எப்ஸ்டீன் ஆவணங்களில், 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எப்.பி.ஐ (FBI) அதிகாரிகள், பாம் பீச் முன்னாள் போலீஸ் அதிகாரி மைக்கேல் ரெயிட்டரிடம் நடத்திய விசாரணை அறிக்கை இடம்பெற்றுள்ளது. அந்த அறிக்கையின்படி, 2000-களின் தொடக்கத்தில் எப்ஸ்டீன் மீதான முதல் விசாரணை நடந்தபோது, ட்ரம்ப் அந்த போலீஸ் அதிகாரிக்குத் தொலைபேசியில் அழைத்து, "நல்ல வேலை, அவனை (எப்ஸ்டீன்) நிறுத்தியதற்கு நன்றி. அவன் இப்படிப்பட்டவன் என்பது ஊருக்கே தெரியும்" என்று கூறியுள்ளார். மேலும், எப்ஸ்டீனின் கூட்டாளி கிஸ்லைன் மேக்ஸ்வெல்லை "கொடூரமானவள்" (Evil) என்று ட்ரம்ப் அப்போதே வர்ணித்ததும், நியூயார்க்கில் உள்ள பலருக்கு எப்ஸ்டீனின் வக்கிரங்கள் குறித்துத் தெரியும் என்று அவர் கூறியதும் தற்போது அம்பலமாகியுள்ளது.
இந்தத் தகவல் தற்போது ஏன் விவாதமாகிறது என்றால், 2020-ம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரச்சாரங்களின்போது, கிஸ்லைன் மேக்ஸ்வெல் கைது செய்யப்பட்டபோது, "அவர் நன்றாக இருக்க வாழ்த்துகிறேன்" (I wish her well) என்று ட்ரம்ப் கூறியிருந்தார். மேலும், எப்ஸ்டீனின் குற்றச்சாட்டுகள் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும், பல ஆண்டுகளுக்கு முன்பே அவருடனான நட்பை முறித்துக் கொண்டதாகவும் ட்ரம்ப் வாதிட்டு வந்தார். ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஆவணங்கள், 13 ஆண்டுகளுக்கு முன்பே எப்ஸ்டீனின் பாலியல் அத்துமீறல்கள் குறித்து ட்ரம்ப் நன்கு அறிந்திருந்தார் என்பதையும், மேக்ஸ்வெல்லை ஒரு 'தீய சக்தி' என அவர் கருதியதையும் உறுதிப்படுத்துகின்றன.
இதற்கிடையில், எப்ஸ்டீன் 2011-ம் ஆண்டு மேக்ஸ்வெல்லுக்கு எழுதியதாகக் கூறப்படும் ஒரு மின்னஞ்சலில், "ட்ரம்ப்புக்கு அந்தப் பெண்களைப் பற்றித் தெரியும், அதனால் தான் அவர்களைத் தன்னிடமிருந்து விலகி இருக்கும்படி அவர் (ட்ரம்ப்) கூறினார்" என்று குறிப்பிட்டுள்ளார். இது ட்ரம்பின் முந்தைய வாதங்களுக்கு நேர்மாறாக உள்ளது. வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் இது குறித்துக் கூறுகையில், "அதிபர் ட்ரம்ப் பல ஆண்டுகளுக்கு முன்பே எப்ஸ்டீனுடனான தொடர்பை துண்டித்துவிட்டார், இது குறித்து அவர் எப்போதும் நேர்மையாகவே இருந்துள்ளார்" என்று விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும், ஜனநாயகக் கட்சியினர் இந்த ஆவணங்களை முன்வைத்து, ட்ரம்ப் உண்மைகளை மறைக்க முயல்வதாகக் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
