சுவிட்சர்லாந்தின் சொகுசு ஸ்கை ரிசார்ட்டில் உள்ள 'லி கான்ஸ்டலேஷன்' பாரில் நடந்த கொடூரமான தீ விபத்தின் சுவடு மறைவதற்குள், அதே இடத்தில் மீண்டும் ஒரு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, ஷாம்பெயின் பாட்டிலில் இருந்த 'ஸ்பார்க்ளர்' வெடிகளால் ஏற்பட்ட தீயில் 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்தச் சோகமான சம்பவத்தில் பலியானவர்களின் நினைவாக வைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்திகளே, தற்போது அவர்களின் நினைவிடத்தையும் எரித்துச் சாம்பலாக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பனி மற்றும் குளிரிலிருந்து அஞ்சலிப் பொருட்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த ‘இக்லூ’ போன்ற கூடாரம், அஞ்சலிக்காக ஏற்றி வைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்திகளால் இன்று அதிகாலை தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்ததால், பொதுமக்கள் தங்கள் உணர்வுகளைப் பதிவிட்டிருந்த ‘பெரிய நினைவேடு’ மட்டும் நல்வாய்ப்பாகத் தப்பியது. இருப்பினும், உயிரிழந்தவர்களின் நினைவாக வைக்கப்பட்டிருந்த ஏராளமான மலர் வளையங்கள் மற்றும் நினைவுப் பொருட்கள் தீயில் கருகிச் சாம்பலானது அங்கிருந்தவர்களின் கண்களைக் குளமாக்கியது.
இந்த இரண்டாம் கட்டத் தீ விபத்து, உயிரிழந்தவர்களின் உறவினர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஏற்கனவே எங்கள் பிள்ளைகளை இழந்து தவிக்கும் நிலையில், அவர்களின் நினைவிடத்தைக் கூடப் பாதுகாக்கத் துப்பில்லை" என்று பெற்றோர்கள் கண்ணீருடன் நகராட்சி நிர்வாகத்தைச் சாடியுள்ளனர். சதி வேலைகள் ஏதுமின்றி மெழுகுவர்த்திகளே காரணம் எனப் போலீஸார் உறுதி செய்தாலும், நிர்வாகத்தின் மெத்தனமே இந்தச் சோகத்திற்கு மீண்டும் ஒருமுறை காரணமாகியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
