அதிபர் வில்லியம் லாய் லூனார் புத்தாண்டு (Lunar New Year) கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் தெற்கு நகரமான தைனானில் (Tainan) உள்ள பிரசித்தி பெற்ற கோயில் ஒன்றிற்குச் சென்றிருந்தார். அப்போது அதிபர் உரையாற்றத் தயாராகிக் கொண்டிருந்த போது, அவருக்கு அருகில் நின்றிருந்த கோயில் நிர்வாகி ஒருவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, எதிர்பாராத விதமாக அதிபர் மீது வாந்தி எடுத்தார்.
தைனானில் உள்ள 'Sacrificial Rites Martial Temple'-ல் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதிபர் வில்லியம் லாய் மற்றும் மேயர் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் மேடையில் இருந்தனர். அப்போது அதிபருக்கு மிக அருகில் நின்றிருந்த கோயில் தலைவர் லின் பெய்-ஹூவோ (Lin Pei-huo), திடீரென அசெளகரியமாக உணர்ந்தார். அவரது கைகள் நடுங்கியதோடு, முகம் வெளிறிப் போனது. ஒரு சில வினாடிகளில் அவர் வாய் பொத்தியும் பலனின்றி, அவரது வாந்தி அதிபரின் தோள்பட்டை மற்றும் உடையில் சிதறியது.
இந்தச் சம்பவத்தால் மேடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அதிபர் வில்லியம் லாய் எவ்வித அருவருப்பும் காட்டாமல் மிகவும் நிதானமாகச் செயல்பட்டார். அரசியலுக்கு வருவதற்கு முன்பே ஒரு தகுதிவாய்ந்த மருத்துவரான (Doctor) லாய், உடனடியாக அந்த முதியவரின் உடல்நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்தார். அவருக்குத் தேவையான முதலுதவி சிகிச்சைகளை ஒருங்கிணைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் பொதுமக்களிடம் பேசிய அதிபர் லாய், அந்த முதியவரின் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு சமீபத்தில் 'நோரோவைரஸ்' (Norovirus) பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே அவரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் விளக்கினார். தற்போது அவரது நிலைமை சீராக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதிபரின் கனிவான நடவடிக்கை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
.jpg)