அஜித் பவார் விமான விபத்து: கருப்புப் தரவுகளை மீட்பதில் நீடிக்கும் சிக்கல்!

கடந்த ஜனவரி 28, 2026 அன்று மகாராஷ்டிராவின் பாராமதி விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறங்க முயன்றபோது, அஜித் பவார் பயணித்த லியர்ஜெட் 45 (Learjet 45) ரக விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜித் பவார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கருப்புப் பெட்டி விபத்தின் போது ஏற்பட்ட கடுமையான தீ மற்றும் வெப்பம் காரணமாகப் பெரிதும் சேதமடைந்துள்ளதாக விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) பிப்ரவரி 17, 2026 அன்று தெரிவித்துள்ளது.

விமானத்தின் தொழில்நுட்பத் தரவுகளைக் கொண்ட டிஜிட்டல் பிளைட் டேட்டா ரெக்கார்டர் (DFDR) வெற்றிகரமாக டெல்லியில் உள்ள ஆய்வகத்தில் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், விமானிகளின் உரையாடல்களைப் பதிவு செய்யும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் (CVR) மிக மோசமான நிலையில் இருப்பதால், அதிலுள்ள ஆடியோ பதிவுகளை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பெட்டி அதிகப்படியான வெப்பத்திற்கு உள்ளாகியுள்ளதால், தரவுகளைச் சிதைக்காமல் எடுப்பதற்காகச் சர்வதேச நிபுணர்களின் உதவியை நாட இந்தியா திட்டமிட்டுள்ளது.

அஜித் பவாரின் மறைவில் சதி இருக்கலாம் என்று அவரது மருமகனும் எம்.எல்.ஏ-வுமான ரோகித் பவார் (Rohit Pawar) தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வருகிறார். கருப்புப் பெட்டி சேதமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், இந்த சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது. "விபத்து நடந்து 20 நாட்களுக்கு மேலாகியும் முறையான விசாரணை அறிக்கை வெளியாகாதது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இது ஒரு திட்டமிட்ட சதித் திட்டமாக இருக்கலாம் எனத் தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம், முதற்கட்ட அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று உறுதி அளித்துள்ளது. கருப்புப் பெட்டியின் குரல் பதிவுகள் மீட்கப்பட்டால் மட்டுமே, விமானம் தரையிறங்கும் கடைசி சில நிமிடங்களில் விமானிகளுக்கும் தரைக்கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே நடந்த உரையாடல்கள் என்ன என்பதும், விபத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பதும் தெரியவரும்.

Previous Post Next Post

Contact Form