GO BACK

ஊசலாடும் பிரித்தானிய அரசு! - மன்னிப்பு கேள் அல்லது பதவி விலகு என எதிர்க்கட்சிகள் முழக்கம்.

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும், அமெரிக்காவிற்கான முன்னாள் பிரித்தானிய தூதர் பீட்டர் மண்டல்சனுக்கும் இடையே இருந்த நெருங்கிய தொடர்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேற்பார்வைக் குழு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மண்டல்சனுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், எப்ஸ்டீனின் குற்றச் செயல்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளம் காண மண்டல்சனிடம் இருக்கும் தகவல்கள் மிக முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மண்டல்சன் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவிற்கான பிரித்தானிய தூதராகப் பதவியேற்றார். ஆனால், எப்ஸ்டீனுடனான அவரது தொடர்புகள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியானதை அடுத்து, செப்டம்பர் மாதமே அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். எப்ஸ்டீனுக்கு அரசு தொடர்பான ரகசியத் தகவல்களை அவர் கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, அவர் பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சி மற்றும் பிரபுக்கள் சபையிலிருந்தும் (House of Lords) விலக நேரிட்டது.

மண்டல்சனின் நியமனம் பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு (Keir Starmer) பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தகுதியற்ற ஒருவரைத் தூதராக நியமித்ததற்காக ஸ்டார்மர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவிலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தால் ஸ்டார்மரின் அமைச்சரவைச் செயலாளர் மற்றும் பல மூத்த அதிகாரிகள் ஏற்கனவே பதவி விலகியுள்ளனர். இதனால் ஸ்டார்மரின் அரசு தற்போது ஊசலாட்டத்தில் உள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான ராபர்ட் கார்சியா மற்றும் சுஹாஸ் சுப்ரமணியம் ஆகியோர், பிப்ரவரி 27, 2026-க்குள் மண்டல்சன் தனது பதிலைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். மண்டல்சனை நேரில் ஆஜராகக் கட்டாயப்படுத்தும் அதிகாரம் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு இல்லை என்றாலும், எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அவர் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மண்டல்சன் இதுவரை தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.