தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், வழக்கமாக திமுகவுக்குக் கிடைக்கும் சிறுபான்மையின வாக்குகள் இந்த முறை தவெக பக்கம் சாய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் டெல்லியில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் திமுக தலைமையிடம் வழங்கிய அறிக்கையில், சில கிறிஸ்தவ தேவாலயங்களில் விஜய்க்கு ஆதரவாகப் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது திமுகவின் 200 தொகுதிகள் இலக்கிற்குப் பெரும் சவாலாக அமையக்கூடும் என்று அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
சிறுபான்மையினர் வாக்குகள் மட்டுமன்றி, முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகளும் கணிசமான அளவில் தவெகவுக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இதனை எதிர்கொள்ள திமுக தற்போது மூன்றுக்கும் மேற்பட்ட தேர்தல் வியூக நிறுவனங்களுடன் (I-PAC, ShowTime Consulting, PEN) இணைந்து செயல்பட்டு வருகிறது. மேலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எனத் தனி ஒரு குழுவும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இளைஞர்களைக் கவரும் வகையில் புதிய திட்டங்களை அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தச் சூழலில், திமுகவுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக கொங்கு மண்டலத்தின் கள நிலவரம் பார்க்கப்படுகிறது. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் அக்கட்சியின் செல்வாக்கு சரிந்துள்ளதாகவும், அங்கு நிலவும் சூழல் திமுகவுக்குச் சாதகமாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. அதே சமயம், தவெக செல்வாக்கு செலுத்தும் தொகுதிகளைக் கண்டறிந்து, அங்குத் கூடுதல் கவனம் செலுத்தவும், வேட்பாளர் தேர்வில் புதிய முறைகளைக் கையாளவும் திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
மக்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியாக, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளர்களுக்குத் திடீரென 5,000 ரூபாய் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது போன்ற அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தவெகவின் தாக்கத்தைக் குறைக்கவும், சிறுபான்மையினர் மற்றும் இளைஞர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறவும் திமுக புதிய தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது. 2026 தேர்தல் களம் விஜய்யின் வரவால் ஒரு மும்முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது உறுதியாகியுள்ளது.
.jpg)