ஏ.ஆர். ரஹ்மான் இசைக்கச்சேரி: சென்னை மெற்றோவில் இலவசப் பயணம் அறிவிப்பு!

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானின் 'தி வொண்டர்மென்ட் டூர்' (The Wonderment Tour) நேரடி இசைக்கச்சேரி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த இசை விருந்துக்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக, மெற்றோ ரயிலில் இலவசமாகப் பயணம் செய்யும் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இசைக்கச்சேரிக்கு வரும் ரசிகர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், எளிதாகவும் பசுமையாகவும் அரங்கிற்கு வந்து சேருவதை உறுதி செய்ய இந்தச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இசைக்கச்சேரிக்கான பயணச்சீட்டு (Ticket) வைத்திருக்கும் அனைத்து ரசிகர்களும் நாளை மெற்றோ ரயிலில் இலவசமாகப் பயணம் செய்யலாம். கச்சேரி நடைபெறும் இடமான நேரு ஸ்டேடியத்திற்கு அருகிலுள்ள மெற்றோ நிலையங்களுக்குச் செல்ல இந்தச் சலுகை பெரிதும் உதவும்.

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 'நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்' (Noise and Grains) நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர். ரஹ்மான் சென்னையில் நடத்தும் இந்த இசைக்கச்சேரியில், அவரது காலத்தால் அழியாத தமிழ் ஹிட் பாடல்கள் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசைக் கோர்வைகள் புதிய மெருகூட்டப்பட்ட நேரடி இசை வடிவில் ஒலிக்க உள்ளன.

இந்த மேடையில் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து சின்மயி ஸ்ரீபாதா, ஏ.ஆர். அமீன், ரக்ஷிதா சுரேஷ், நகுல் அபியங்கர், அம்ருதா சுரேஷ் மற்றும் ஆதித்யா ஆர்.கே உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்கள் பாட உள்ளனர். மேலும், சில ஆச்சரியமான விருந்தினர்களும் மேடையில் தோன்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post Next Post

Contact Form