GO BACK

எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கிய பிரான்ஸ் தூதர்! குழந்தைகள் பாலியல் புகார் - பிரான்ஸ் வெளியுறவுத்துறை அதிரடி விசாரணை!

அமெரிக்காவின் பிரபல பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனின் (Jeffrey Epstein) ரகசிய ஆவணங்கள் சமீபத்தில் வெளியான நிலையில், அதில் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரான்ஸ் நாட்டுத் தூதரக அதிகாரி பேப்ரைஸ் ஐடன் (Fabrice Aidan) மீது விசாரணை நடத்த அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் வெளியானதும் தான் "அதிர்ச்சியடைந்ததாக" பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் (Jean-Noel Barrot) தெரிவித்துள்ளார். எப்ஸ்டீனின் நட்பு வட்டத்தில் இருந்த ஐடன், ஐக்கிய நாடுகள் சபையில் (UN) பணியாற்றியபோது பல முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வெளியாகியுள்ள ஆவணங்களின்படி, பேப்ரைஸ் ஐடன் 2010 முதல் எப்ஸ்டீனுடன் தொடர்ச்சியாக மின்னஞ்சல் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். அப்போது ஐக்கிய நாடுகள் சபையின் நியூயார்க் அலுவலகத்தில் பணியாற்றி வந்த இவர், ஐ.நா.வின் முக்கிய ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை எப்ஸ்டீனுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, 2013-ஆம் ஆண்டு எப்ஸ்டீன் அனுப்பிய ஒரு மின்னஞ்சலில், ஐடன் குழந்தைகள் தொடர்பான பாலியல் இணையதளங்களைப் (Child pornography sites) பார்வையிட்டதாக எஃப்.பி.ஐ (FBI) நடத்திய விசாரணையின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய ஐ.நா.வுக்கான பிரான்ஸின் முன்னாள் பிரதிநிதி ஜெரார்ட் அரௌட், "ஐடன் குழந்தைகள் பாலியல் தொடர்பான இணையதளங்களை அடிக்கடி பார்வையிடுவதாக எஃப்.பி.ஐ எங்களுக்கு அறிக்கை அனுப்பியது. அதன்பேரில் 2013-ஆம் ஆண்டே அவரை உடனடியாகப் பிரான்ஸிற்குத் திருப்பி அனுப்பினேன்" என்று உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், அவர் மீது அப்போது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில், எப்ஸ்டீன் ஆவணங்கள் வெளியான பிறகு தற்போது பொது வழக்கறிஞர் மூலம் விரிவான குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரான்ஸின் வெளியுறவுத் துறைச் செயலாளராகப் பணியாற்றி வந்த ஐடன், தற்போது தனிப்பட்ட காரணங்களுக்காக விடுப்பில் இருந்துள்ளார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, அவர் பணியாற்றி வந்த தனியார் நிறுவனமான 'எஞ்சி' (Engie) அவரைப் பணியிலிருந்து நீக்கியுள்ளது. ஏற்கனவே எப்ஸ்டீன் விவகாரத்தில் பிரான்ஸ் முன்னாள் அமைச்சர் ஜாக் லாங் போன்ற முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில், தற்போது இந்தத் தூதரக அதிகாரியின் மீதான விசாரணை பிரான்ஸ் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.