GO BACK

daylight jewellery robbers in London :பட்டப் பகலில் லண்டனில் ஜிவலரி கடையில் கொள்ளை- VIDEO

லண்டனின் மேற்குப் பகுதிகளில் உள்ள உயர்தர நகைக்கடைகளை இலக்கு வைத்து மர்ம கும்பல்கள் நடத்தி வரும் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் அந்த நகரையே அதிர வைத்துள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நைட்பிரிட்ஜ் (Knightsbridge), ரிச்மண்ட் (Richmond) மற்றும் ஷெப்பர்ட்ஸ் புஷ் (Shepherds Bush) ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் மிக மோசமாகத் தாக்கப்பட்டுள்ளன. கொள்ளையர்கள் எஸ்யுவி (SUV) ரகக் கார்களைக் கொண்டு கடையின் இரும்பு கதவுகளை இடித்தும், மோட்டார் சைக்கிள்களில் புகுந்தும் கண்ணாடிகளை உடைத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான ரோலக்ஸ் கடிகாரங்கள் மற்றும் வைர நகைகளைச் சூறையாடிச் சென்றுள்ளனர்.


ஆச்சரியப்படத்தக்க வகையில், நூற்றுக்கணக்கான நகைக்கடைகள் ஒரே இடத்தில் அமைந்துள்ள லண்டனின் புகழ்பெற்ற வைரச் சந்தையான 'ஹாட்டன் கார்டன்' (Hatton Garden) பகுதியை இந்தக் கொள்ளையர்கள் சீண்டக்கூட இல்லை. சுமார் 300-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் இருக்கும் இந்தப் பகுதியில் கொள்ளையடிப்பது எளிது என்றாலும், அங்கு நுழையக் கொள்ளையர்கள் அஞ்சுகிறார்கள். இதற்குப் பின்னால் லண்டன் நிழல் உலக தாதாக்களின் ரகசியக் கட்டுப்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, 'பிரிட்டிஷ் காட்பாதர்' என்று அழைக்கப்படும் டெர்ரி ஆடம்ஸ் தலைமையிலான 'ஆடம்ஸ் குடும்பம்' (Adams family) எனப்படும் குற்றவியல் கும்பல் பல தசாப்தங்களாக ஹாட்டன் கார்டன் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இங்கு ஏதேனும் கொள்ளை நடந்தால் அது ஆடம்ஸ் குடும்பத்தின் அதிகாரத்திற்கே விடுக்கப்படும் சவாலாகக் கருதப்படும் என்பதால், உள்ளூர் கொள்ளைக் கும்பல்கள் இந்தப் பக்கமே தலைவைத்துத் படுப்பதில்லை. 2015-ல் நடந்த ஒரு பெரும் கொள்ளைச் சம்பவமே, ஆடம்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைச் சிறையிலிருந்து காப்பாற்றத் தேவையான ஆதாரங்களை அழிக்கவே நடத்தப்பட்டதாக இப்போதும் பேசப்படுகிறது.

தற்போது லண்டனின் மற்ற பகுதிகளில் நடக்கும் தாக்குதல்கள், அங்குள்ள பாதுகாப்புக் குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. காவல்துறையினரின் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட போதிலும், அதிவேக மோட்டார் சைக்கிள்களில் வரும் மர்ம நபர்களைப் பிடிப்பது பெரும் சவாலாகவே உள்ளது. ஹாட்டன் கார்டன் போன்ற பகுதிகளில் நிலவும் ஒருவித 'நிழல் உலகப் பாதுகாப்பு' மற்ற இடங்களுக்கு இல்லாததே இத்தகைய தொடர் கொள்ளைகளுக்குக் காரணம் எனப் பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.