பாபர் மசூதியை மீண்டும் ஒருபோதும் கட்ட முடியாது என்றும், அதைப் பற்றி கனவு காண்பவர்கள் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். பாராபங்கியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், மசூதி கட்டப்படும் என்று சில தரப்பினர் காத்திருக்கும் அந்த "தீர்ப்பு நாள்" (Judgement Day) ஒருபோதும் வராது என்று திட்டவட்டமாகக் கூறினார். அத்தகைய கனவுகளைக் கைவிட்டுவிட்டு, இந்தியாவில் உள்ள விதிகளின்படி வாழக் கற்றுக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.
நாட்டின் சட்டத்தை மீறி யாராவது செயல்பட முயன்றால், அந்தப் பாதை அவர்களை நேராக நரகத்திற்குத்தான் இட்டுச் செல்லும் என்று யோகி ஆதித்யநாத் கடும் சொற்களால் எச்சரித்தார். "சட்டங்களை மீறிவிட்டு சொர்க்கத்திற்குச் செல்லலாம் என்று யாராவது கனவு கண்டால், அவர்களின் கனவு ஒருபோதும் நனவாகாது" என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் இறையாண்மைக்கும் சட்டத்திற்கும் அனைவரும் கீழ்ப்படிய வேண்டியது கட்டாயம் என்பதை வலியுறுத்தினார். சட்டத்தை மீறுபவர்களுக்கு அரசு தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்பதையும் அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.
மேலும், எதிர்க்கட்சிகளைச் சாடிய அவர், சில சந்தர்ப்பவாதிகள் தங்களுக்குப் பிரச்சனை வரும்போது மட்டும் ராமரை நினைத்துக் கொள்வதாகவும், பின்னர் அவரை மறந்துவிடுவதாகவும் விமர்சித்தார். "இப்படிப்பட்டவர்களை ராமரும் மறந்துவிட்டார், அதனால் அவர்களால் இனி அரசியலில் வெற்றி பெறவோ, முன்னேறவோ முடியாது" என்று அவர் கூறினார். அயோத்தி ராமாயண காலத்திலிருந்து தற்போது வரை ராமரின் பெயரால் அரசியல் லாபம் தேடுபவர்களுக்குப் பாடம் புகட்டப்படும் என்ற ரீதியில் அவரது உரை அமைந்திருந்தது.
.jpg)