அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் மிஷெல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் ஏஐ (AI) வீடியோ பகிரப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 62 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் இனவெறியைத் தூண்டும் காட்சிகள் இடம் பெற்றிருந்ததால், அது சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. 'கறுப்பினத்தவர் வரலாற்று மாதமான' பிப்ரவரியில் இத்தகைய பதிவு வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பின்னர் அந்த வீடியோ நீக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் விளக்கமளித்த டிரம்ப், தான் வீடியோவின் ஆரம்பப் பகுதியை மட்டுமே பார்த்ததாகவும், தேர்தல் முறைகேடுகள் குறித்த தகவல் இருந்ததால் அதைப் பகிரச் சொன்னதாகவும் தெரிவித்தார். வீடியோவின் இறுதியில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளைத் தான் கவனிக்கவில்லை என்றும், ஒரு ஊழியர் செய்த தவறுக்காகத் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். அதே சமயம், அந்த இனவெறித் தூண்டல் காட்சிகளைத் தான் தனிப்பட்ட முறையில் கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
டிரம்பின் இந்தச் செயலுக்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெள்ளை மாளிகை தரப்பில் இது ஒரு ஊழியரின் தவறு என்று கூறப்பட்டாலும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்களே இந்த வீடியோவின் உள்ளடக்கத்தை விமர்சித்துள்ளனர். "நான் இனவெறியாளர் கிடையாது" என்று டிரம்ப் மறுப்பு தெரிவித்த போதிலும், மன்னிப்பு கேட்க மறுத்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
.jpg)