பிரிட்டனில் உள்ள சிறுவர்களை ஆன்லைன் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க, சமூக ஊடகங்கள் மற்றும் AI சாட்போட்கள் (AI Chatbots) மீது புதிய சட்டக் கட்டுப்பாடுகளை அமல்படுத்த உள்ளதாகப் பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். "தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது, அதற்கேற்ப சட்டங்களும் மாற வேண்டும். எனது அரசாங்கத்தின் கீழ், இணையப் பாதுகாப்பில் பிரிட்டன் ஒரு முன்னோடியாகத் திகழும். எந்தவொரு சமூக ஊடகத் தளமும் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது (No platform gets a free pass)" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சட்டங்களில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்பட்டு, அனைத்து AI சாட்போட் நிறுவனங்களும் பிரிட்டனின் 'ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்திற்கு' (Online Safety Act) உட்பட்டு செயல்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் எலான் மஸ்க்கின் 'Grok' AI தளம் மூலம் உருவாக்கப்பட்ட போலி ஆபாசப் படங்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இந்தத் திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அவற்றின் உலகளாவிய வருமானத்தில் 10% வரை அபராதம் விதிக்கவும், தேவையெனில் அந்தத் தளங்களை முடக்கவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பது குறித்துப் பொதுமக்களிடம் கருத்து கேட்பு (Consultation) நடத்தப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் உள்ள 'இன்ஃபினைட் ஸ்க்ரோலிங்' (Infinite Scrolling) போன்ற போதை தரும் அம்சங்களைக் கட்டுப்படுத்துவது, சிறுவர்கள் விபிஎன் (VPN) பயன்படுத்தி ஆபாசத் தளங்களை அணுகுவதைத் தடுப்பது போன்ற அம்சங்களும் இதில் அடங்கும். இரண்டு பதின்ம வயது பிள்ளைகளின் தந்தை என்ற முறையில், இணையதளங்கள் ஒரு 'கண்ணிவெடி' போல இருப்பதை தாம் உணர்வதாகவும் அவர் உருக்கமாகக் கூறினார்.
ஜூல்ஸ் சட்டம் (Jools' Law) என்ற புதிய விதியின் கீழ், இணைய சவால்கள் அல்லது ஆன்லைன் பாதிப்புகளால் ஒரு குழந்தை உயிரிழந்தால், அந்தப் பிள்ளையின் சமூக ஊடகத் தரவுகளை (Data) அழியாமல் பாதுகாப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்த அதிரடி முடிவுக்குக் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அதே சமயம், வெறும் ஆலோசனைகளோடு நிறுத்தாமல், ஆஸ்திரேலியாவைப் போல உடனடித் தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
.jpg)