பக்கிங்ஹாம் அரண்மனையில் பாலியல் விருந்து? - இரண்டாவது பெண் அளித்த பகீர் புகார்; சொந்தத் தம்பிக்கு எதிராகத் திரும்பிய மன்னர் சார்லஸ்.


ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் அமெரிக்க நீதித்துறை அண்மையில் வெளியிட்ட 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களில், முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவின் பெயர் பல நூறு முறை இடம் பெற்றுள்ளது. குறிப்பாக, அதில் உள்ள ஒரு புகைப்படத்தில், அடையாளம் தெரியாத ஒரு பெண் தரையில் படுத்திருக்க, அவர் மீது இளவரசர் ஆண்ட்ரூ முழங்காலிட்டு அமர்ந்து குனிந்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பெண்ணின் முகம் ஆவணங்களில் மறைக்கப்பட்டிருந்தாலும், இது பாலியல் ரீதியான அத்துமீறலைக் குறிப்பதாகப் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

ஏற்கனவே வர்ஜீனியா கிஃபெரே (Virginia Giuffre) என்பவர் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் அளித்திருந்த நிலையில், தற்போது பெயர் குறிப்பிடப்படாத இரண்டாவது பெண் ஒருவர் புதிய புகாரைப் பதிவு செய்துள்ளார். எப்ஸ்டீன் தன்னை லண்டனுக்குக் கடத்தி வந்து, இளவரசர் ஆண்ட்ரூவின் 'ராயல் லாட்ஜ்' இல்லத்தில் வைத்துப் பாலியல் உறவில் ஈடுபட நிர்ப்பந்தித்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். அந்த இரவு முடிந்த பிறகு, தனக்குப் பக்கிங்ஹாம் அரண்மனையில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டதாகவும், அரண்மனையைச் சுற்றிக் காட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, தனது சகோதரர் ஆண்ட்ரூ மீதான பிடியை மன்னர் சார்லஸ் III இறுக்கியுள்ளார். ஏற்கனவே ஆண்ட்ரூவின் 'இளவரசர்' மற்றும் 'டியூக் ஆஃப் யார்க்' ஆகிய பட்டங்களைப் பறித்த மன்னர், தற்போது எப்ஸ்டீன் தொடர்பான விசாரணையில் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக 'தி சன்' (The Sun) நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், "மன்னர்: ஆண்ட்ரூ விவகாரத்தில் போலீசாருக்கு உதவுவோம்" என்ற தலைப்புடன் அரண்மனையின் அதிகாரப்பூர்வ நிலப்பாட்டை விளக்கியுள்ளது.

இருப்பினும், தன் மீது சுமத்தப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஆண்ட்ரூ தொடர்ந்து மறுத்து வருகிறார். எப்ஸ்டீனுடனான நட்பு ஒரு 'தவறு' என்று அவர் ஒப்புக்கொண்டாலும், பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடவில்லை என வாதிடுகிறார். தற்போது லண்டன் போலீசார் இந்த ஆவணங்களை ஆய்வு செய்து வருவதால், ஆண்ட்ரூ மீது குற்றவியல் விசாரணை பாய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த விவகாரத்தால் பிரித்தானிய ராஜ குடும்பத்தின் கௌரவம் சர்வதேச அளவில் மீண்டும் ஒருமுறை கேள்விக்குறியாகியுள்ளது.

Previous Post Next Post

Contact Form