இந்த சிஸ்டமே மோசம் - என்னால் பணி புரிய முடியாது- நீதிமன்றில் குமுறிய பெண் வக்கீல் !
அதிபர் டிரம்ப் பதவியேற்றது முதல் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கைது செய்து வெளியேற்றுவதில் வேகம் காட்டி வருகிறார். இதனால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நீதிமன்றத்திற்கு வருகின்றன. இது குறித்து விளக்கம் கேட்ட நீதிபதி ஜெர்ரி பிளாக்வெல்லிடம் வழக்கறிஞர் ஜூலி பேசுகையில், "தற்போதுள்ள நடைமுறைகள் மிகவும் மோசமாக உள்ளன. நான் இரவு பகலாக உழைக்கிறேன். என்னைக் நீதிமன்ற அவமதிப்பு (Contempt of court) வழக்கில் சிறையிலாவது அடையுங்கள், அப்போதுதான் என்னால் 24 மணி நேரமாவது நிம்மதியாகத் தூங்க முடியும்" என்று கதறியுள்ளார். போதுமான வழக்கறிஞர்கள் இல்லாததால் அரசுத் தரப்பு திணறுவதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
நீதிமன்ற உத்தரவுகளை குடியேற்றத் துறை (ICE) முறையாகப் பின்பற்றுவதில்லை என்று நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும், சில அரசு அமைப்புகள் தங்கள் வாழ்நாளில் கூட மீறாத அளவுக்குக் கோர்ட் உத்தரவுகளை ICE அமைப்பு மீறியுள்ளதாகத் தலைமை நீதிபதி சாடியுள்ளார். சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டும், அதிகாரிகள் அதனைச் செயல்படுத்தத் தவறியுள்ளனர். ஒரு சிறு பிழையைச் சரி செய்யக் கூட 10 மின்னஞ்சல்கள் அனுப்ப வேண்டியிருப்பதாகவும், மிரட்டினால் மட்டுமே அதிகாரிகள் வேலை செய்வதாகவும் ஜூலி லே நீதிமன்றத்தில் போட்டு உடைத்துள்ளார்.
வழக்கறிஞரின் இந்த வெளிப்படையான பேச்சு, டிரம்பின் நிர்வாகத்தில் நிலவும் குளறுபடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. நீதிபதிக்கு அரசு வழங்கிய வாக்குறுதிகள் மீறப்பட்டதற்காக ஜூலி மற்றும் மற்றொரு வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிபதி எச்சரித்திருந்த நிலையில், தற்போது ஜூலி அங்கிருந்து மாற்றப்பட்டுள்ளார். இதற்கிடையில், கடுமையான பணிச்சுமை மற்றும் சட்டச் சிக்கல்கள் காரணமாக 'மெட்ரோ சர்ஜ்' திட்டத்தைச் சற்று குறைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அமெரிக்கக் குடியேற்றச் சட்ட அமலாக்கத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிர்வாகச் சிக்கலாகப் பார்க்கப்படுகிறது.

No comments: