GO BACK

சேப்பாக்கத்தில் திடீர் 'விசில்' தடை! பின்னணியில் விஜய் கட்சியின் சின்னமா? 'விசில் போடு'


சேப்பாக்கத்தில் திடீர் 'விசில்' தடை! 'விசில் போடு' கோட்டைக்குள் அதிரடி சோதனை - பின்னணியில் விஜய் கட்சியின் சின்னமா?

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் 2026 டி20 உலகக்கோப்பை போட்டிகளின் போது, ரசிகர்கள் மைதானத்திற்குள் விசில் கொண்டு வருவதற்கு அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் நுழைவு வாயில்களில் ரசிகர்களிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டு, அவர்கள் கொண்டு வந்த விசில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. "விசில் போடு" என்ற முழக்கத்திற்குப் பெயர்பெற்ற சென்னை மண்ணிலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தடை குறித்து சேப்பாக்கம் மைதான நிர்வாகம் (TNCA) அதிரடி விளக்கம் அளித்துள்ளது. விசில்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அல்லது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் (BCCI) எந்த சம்பந்தமும் இல்லை என்று நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. இது முழுக்க முழுக்க பாதுகாப்பு மற்றும் உள்ளூர் காரணங்களுக்காக சென்னை காவல்துறை எடுத்துள்ள முடிவு என்று மைதான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தடைக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் ஆகும். நடிகர் விஜய் தொடங்கியுள்ள 'தமிழக வெற்றிக் கழகம்' (TVK) கட்சிக்குத் தேர்தல் ஆணையம் 'விசில்' சின்னத்தை ஒதுக்கியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், மைதானத்திற்குள் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விசில் அடிக்கும்போது அது ஒரு அரசியல் கட்சியின் பிரச்சாரமாக மாறிவிடக்கூடாது என்பதற்காகவே இந்தத் தடை விதிக்கப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

காவல்துறையின் இந்த நடவடிக்கை குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் (IT Wing) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "மைதானத்திற்குள் வரும் விசிலைத் தடுத்துவிடலாம், ஆனால் மக்களின் மனதிற்குள் ஒலிக்கும் மாற்றத்திற்கான விசிலை யாரால் தடுக்க முடியும்?" என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இத்தனை ஆண்டுகளாக இல்லாத புது விதியாக இப்போது விசில் தடை செய்யப்பட்டிருப்பது, ஆட்சியாளர்களின் பயத்தையே காட்டுகிறது என்றும் அக்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மைதானத்திற்கு வெளியே விசில்களை விற்பனை செய்த வியாபாரிகளிடமும், விசில்களை விற்கக் கூடாது என்று காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாகக் கிரிக்கெட் போட்டிகளின் போது தண்ணீர் பாட்டில்கள், பவர் பேங்க், குடை போன்ற பொருட்களுக்கு மட்டுமே தடை இருக்கும். ஆனால், இப்போது முதன்முறையாகச் சென்னை மைதானத்தில் விசிலுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் கலாச்சாரத்தையே சிதைப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் போட்டியின் போதே இந்தத் தடை அமலுக்கு வந்தது. "விசில் போடு" என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாக இருக்கும் நிலையில், இந்தத் தடை ஐபிஎல் போட்டிகளின் போதும் தொடருமா என்ற கவலை ரசிகர்களிடம் எழுந்துள்ளது. எது எப்படியோ, கிரிக்கெட் மைதானத்தில் ஒலிக்கும் விசில் சத்தம் இப்போது அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.