GO BACK

கூட்டணி ஆட்சி தமிழகத்திற்குச் செட் ஆகாது! - காங்கிரஸின் பவர் ஷேரிங் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திமுக மற்றும் அதன் முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக அறிவாலயத்திற்கும், சத்தியமூர்த்தி பவனுக்கும் இடையே நடக்கும் 'வார்த்தைப் போர்', வரும் 2026 தேர்தலில் இந்தக் கூட்டணி தொடருமா? என்ற கேள்வியைச் சமானிய மக்கள் மத்தியிலும் எழுப்பியுள்ளது. ராகுல் காந்தி மற்றும் முதல்வர் ஸ்டாலின் இடையிலான நட்பு வலுவாக இருந்தாலும், தொகுதிப் பங்கீடு என்று வரும்போது இரு கட்சிகளும் தங்களது பிடியைத் தளர்த்த மறுக்கின்றன.

 வழக்கமாக திமுக கூட்டணியில் 25 முதல் 30 தொகுதிகளைப் பெற்று வந்த காங்கிரஸ், இந்த முறை கணிசமாக உயர்த்தி 40 தொகுதிகள் வரை கோரி வருகிறது. அதுமட்டுமின்றி, "ஆட்சியில் பங்கு" (Power Sharing) வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மேலிடப் பொறுப்பாளர்கள் வலுவாக முன்வைக்கின்றனர். "நாங்கள் இல்லாமல் திமுகவால் ஆட்சியைக் காப்பாற்ற முடியாது" என்ற தொனியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பேசி வருவது திமுகவினரை எரிச்சலடையச் செய்துள்ளது.

காங்கிரஸின் இந்தக் கோரிக்கைகளை திமுக தலைமை முற்றிலுமாக நிராகரித்துள்ளது. "தமிழக அரசியல் சூழலில் கூட்டணி ஆட்சி என்பது செட் ஆகாது" என்று முதல்வர் ஸ்டாலின் சமீபத்திய பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். மேலும், கடந்த 2021 தேர்தலைப் போலவே 25 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது. புதிய கட்சிகள் (விஜய்யின் தமிழக வெற்றி கழகம் போன்றவை) களமிறங்குவதால், திமுக அதிக தொகுதிகளில் (சுமார் 170+) தனித்து நின்று பெரும்பான்மையை நிரூபிக்க விரும்புவதே இந்த இழுபறிக்கு முக்கியக் காரணமாகும்.

ஒருபுறம் தொகுதிப் பங்கீடு இழுபறி நீடிக்க, மறுபுறம் நடிகர் விஜய்யின் தவெக கட்சி காங்கிரஸிற்கு ஆதரவு தரத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இது திமுகவிற்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. இருப்பினும், "ராகுல் காந்தி என்னை அண்ணனாகப் பார்க்கிறார், எங்கள் கூட்டணி உடையாது" என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 22-ஆம் தேதிக்குப் பிறகுதான் இதற்கான முறையான பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு, இறுதி முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது.