GO BACK

Andrew is arrested : எப்ஸ்டீன் விவகாரத்தில் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது- பெரும் களோபர நிலை(VIDEO)

பிரிட்டன் மன்னர் சார்லஸின் தம்பியும், முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ, இன்று தனது 66-வது பிறந்தநாளில் 'பொதுப் பதவியில் முறையற்ற நடத்தை' (Misconduct in Public Office) என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடனான (Jeffrey Epstein) அவரது தொடர்பு குறித்த புதிய ஆதாரங்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


நார்போக்கில் (Norfolk) உள்ள சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் (Sandringham Estate) தங்கியிருந்த ஆண்ட்ரூவை, இன்று அதிகாலை தேம்ஸ் வேலி போலீசார் (Thames Valley Police) கைது செய்தனர்.

கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அவருக்குச் சொந்தமான விண்ட்சர் மற்றும் சாண்ட்ரிங்ஹாம் இல்லங்களில் போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2010-ம் ஆண்டு பிரிட்டனின் வர்த்தகத் தூதராக (Trade Envoy) இருந்தபோது, ரகசிய அரசு ஆவணங்களை ஜெப்ரி எப்ஸ்டீனுக்குப் பகிர்ந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்ட 30 லட்சம் பக்கங்கள் கொண்ட 'எப்ஸ்டீன் கோப்புகளில்' (Epstein Files), ஆண்ட்ரூ அனுப்பிய ரகசிய மின்னஞ்சல்கள் சிக்கின. இதில் ஆசிய நாடுகளுக்கான வர்த்தகப் பயணங்கள் குறித்த ரகசியத் தகவல்களை அவர் எப்ஸ்டீனுடன் பகிர்ந்து கொண்டது உறுதியானது. "சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்" என பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் மன்னர் சார்லஸ் III மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே கடந்த ஆண்டு ஆண்ட்ரூவின் அரச பட்டங்கள் பறிக்கப்பட்ட நிலையில், "காவல்துறையின் விசாரணைக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயார்" என பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிறந்தநாளில் நிகழ்ந்த இந்த கைது நடவடிக்கை பிரிட்டன் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.