கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியான டம்பளர் ரிட்ஜ் (Tumbler Ridge) நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கோரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், ஒரு ஆசிரியர் மற்றும் ஐந்து மாணவர்கள் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவிக்கப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) விரைவில் அங்கு நேரில் செல்லவுள்ளார்.
போலீஸ் தகவல்களின்படி, 18 வயதான ஜெஸ்ஸி வான் ரூட்செலர் (Jesse Van Rootselaar) என்ற இளம்பெண், முதலில் தனது வீட்டிலேயே தனது தாய் மற்றும் வளர்ப்புச் சகோதரரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். அதன் பிறகு உள்ளூர் பள்ளிக்குச் சென்று அங்கிருந்த ஒரு ஆசிரியர் மற்றும் ஐந்து இளம் மாணவர்களைச் சுட்டுக் கொன்ற அவர், இறுதியில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். ஜெஸ்ஸி கடந்த ஆறு ஆண்டுகளாகத் திருநங்கையாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் என்பதும், அவர் கடுமையான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜெஸ்ஸியின் மனநலப் பாதிப்புகள் குறித்து ஏற்கனவே போலீசாருக்குப் புகார்கள் வந்துள்ளன. போலீசார் அவரது வீட்டிற்குச் சென்று இரண்டு முறை அவரைப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் அவரது வீட்டிலிருந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட போதிலும், அதன் உரிமையாளர் மேல்முறையீடு செய்ததால் அந்தத் துப்பாக்கிகள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. இந்த முடிவே இப்போது இவ்வளவு பெரிய உயிர்ச்சேதத்திற்குக் காரணமாகிவிட்டதாகப் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தத் துயரச் சம்பவத்தை ஒட்டி, கனடா முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏழு நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனப் பிரதமர் அறிவித்துள்ளார். டொராண்டோவில் உள்ள புகழ்பெற்ற சிஎன் டவர் (CN Tower) உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விளக்குகள் அணைக்கப்பட்டு மௌனம் கடைப்பிடிக்கப்பட்டது. சுமார் 2,400 மக்கள் மட்டுமே வசிக்கும் அந்தச் சிறிய மலைக் கிராமத்தில், உயிரிழந்த குழந்தைகளுக்காகப் பொதுமக்கள் பொம்மைகள் மற்றும் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
