மீண்டும் விருத்தாச்சலத்தில் போட்டியிடத் திட்டமிடும் பிரேமலதா மறுத்தது திமுக !


 தமிழக அரசியலில் நீண்ட கால எதிர்பார்ப்பிற்குப் பிறகு, தேமுதிக முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே. சுதீஷ் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் மூலம் 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதி செய்யப்பட்டது. "பழம் நழுவி பாலில் விழும்" என மறைந்த முதல்வர் கருணாநிதி 2016-லேயே குறிப்பிட்டது, தற்போது விஜயகாந்த் இல்லாத சூழலில் தாமதமாக நடந்திருப்பதாக பிரேமலதா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த மெகா கூட்டணியில் தேமுதிகவுக்கு 7 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தேமுதிக தரப்பில் தங்களுக்கு செல்வாக்குள்ள 20 தொகுதிகளின் பட்டியலை திமுக தலைமையிடம் வழங்கியுள்ளனர். இதில் விருகம்பாக்கம், விருத்தாசலம், ரிஷிவந்தியம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட முக்கியத் தொகுதிகள் அடங்கும். எஞ்சிய தொகுதிகள் மற்றும் எந்தெந்த இடங்கள் என்பன குறித்து திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழு அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்க உள்ளது.

தனது முதல் தேர்தல் களத்தைச் சந்திக்கவுள்ள பிரேமலதா விஜயகாந்த், தனது கணவர் விஜயகாந்த் வெற்றி பெற்ற விருத்தாசலம் அல்லது ரிஷிவந்தியம் ஆகிய தொகுதிகளில் ஒன்றைத் தேர்வு செய்யத் திட்டமிட்டிருந்தார். ஆனால், திமுக தலைமையோ அவரை சென்னையில் போட்டியிடுமாறு அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. குறிப்பாக, சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் பிரேமலதாவைக் களமிறக்க திமுக ஆர்வம் காட்டி வருகிறது.

விருகம்பாக்கம் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு வலுவான பெண் வேட்பாளரான தமிழிசையை எதிர்கொள்ள பிரேமலதா விஜயகாந்த் தான் சரியான தேர்வாக இருப்பார் என்பது திமுகவின் கணக்கு. மேலும், சென்னையில் போட்டியிடுவதன் மூலம் பிரேமலதா எளிதாகத் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மற்ற திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்ய முடியும் என்றும் திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

இந்தத் தேர்தல் தேமுதிகவுக்கு ஒரு வாழ்வா சாவா போராட்டமாக அமைந்துள்ள நிலையில், திமுகவின் வியூகம் பிரேமலதாவுக்குப் பெரும் சவாலாகவும் வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. விஜயகாந்த் விட்டுச் சென்ற அரசியல் பயணத்தைத் தொடரப் போவதாகக் கூறும் பிரேமலதா, சென்னையில் களம் கண்டு வெற்றி பெறுவாரா அல்லது தனது விருப்பப்படியே பழைய தொகுதிகளுக்குச் செல்வாரா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.

Previous Post Next Post

Contact Form