"மிடாஸ்" (Midas case) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஊழல் வழக்கு, உக்ரைனின் அரசுக்குச் சொந்தமான அணுசக்தி நிறுவனமான 'எனெர்கோஆட்டம்' (Energoatom) உடன் தொடர்புடையது. இந்த நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து சுமார் 10% முதல் 15% வரை முறைகேடாகப் பணம் பெற்றதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரம் கடந்த ஆண்டு உக்ரைன் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய நிலையில், ஹாலுஷ்சென்கோ தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கைது செய்யப்பட்டபோது, ஹாலுஷ்சென்கோ தனக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், அதன் அடிப்படையில் தனக்கு நாட்டை விட்டுச் செல்ல சட்டப்பூர்வ உரிமை இருப்பதாகவும் கூறி தப்பிக்க முயன்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனில் போர்ச் சூழல் நிலவுவதால், மூன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை உடைய தந்தைகளுக்கு மட்டுமே வெளிநாடு செல்ல அனுமதி உண்டு. ஆனால், இவர் ஊழல் வழக்கில் விசாரிக்கப்பட்டு வருவதால், இவரது பயணத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் (European Union) இணைவதற்கு ஊழலற்ற நிர்வாகம் மிகவும் அவசியமான நிபந்தனையாகும். எனவே, அதிபர் ஜெலென்ஸ்கியின் அரசாங்கம் ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த அமைச்சரின் கைது, உக்ரைன் அரசு ஊழலை ஒழிப்பதில் எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதைக் காட்டும் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
