எப்ஸ்டீன் கோப்புகள்: புதினின் அதிகார மையத்தில் ஊடுருவ முயன்றாரா ஜெப்ரி? - அதிரவைக்கும் புதிய தகவல்கள்

உலகையே உலுக்கி வரும் ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில், தற்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பெயரும் அடிபடுவது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள சுமார் 30 லட்சம் பக்கங்கள் கொண்ட புதிய ஆவணங்களின்படி, எப்ஸ்டீன் பல ஆண்டுகளாக புதினைச் சந்திக்கத் தீவிரமாக முயன்று வந்தது அம்பலமாகியுள்ளது. "ரஷ்யாவில் மேற்கத்திய முதலீடுகளை ஈர்ப்பதற்கான தீர்வு என்னிடம் உள்ளது" என்று கூறி, புதினின் கவனத்தை ஈர்க்க எப்ஸ்டீன் பல தூதர்களைப் பயன்படுத்தியுள்ளார். புதினின் பெயர் மட்டும் இந்த ஆவணங்களில் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளது.

எப்ஸ்டீன் தனது செல்வாக்கை ரஷ்யாவிற்குள்ளும் செலுத்தத் திட்டமிட்டிருந்தார் என்பதை இந்த ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக, ஐநாவுக்கான ரஷ்யாவின் முன்னாள் தூதர் விடாலி சுர்கின் (Vitaly Churkin) என்பவருடன் எப்ஸ்டீன் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளார். சுர்கினின் மகனுக்கு நியூயார்க்கில் வேலை வாங்கித் தருவதாகக் கூட எப்ஸ்டீன் உறுதியளித்துள்ளார். 2017-ல் சுர்கின் மறைந்த பிறகு, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மூலம் புதினைச் சந்திக்க எப்ஸ்டீன் காய் நகர்த்தியுள்ளார். "புதினைச் சந்திக்க எனக்குத் தனிப்பட்ட நேரமும் (Privacy) போதிய கால அவகாசமும் ஒதுக்கப்பட வேண்டும்" என்று எப்ஸ்டீன் நிபந்தனை விதித்ததும் இந்த மின்னஞ்சல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த ஆவணங்களில் மற்றுமொரு அதிரடித் தகவலாக, புதினின் முன்னாள் உதவியாளரான மரியா ட்ரோகோவா (Maria Drokova) என்பவருடன் எப்ஸ்டீன் நெருக்கமாகப் பழகியுள்ளார். 'நஷி' (Nashi) எனும் கிரெம்ளின் ஆதரவு இளைஞர் அமைப்பின் தலைவியான இவர், எப்ஸ்டீனின் தனிப்பட்ட பிம்பத்தை உலக அளவில் உயர்த்துவதற்காகப் பல திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளார். மேலும், ரஷ்யாவின் உளவு அமைப்பான எப்எஸ்பி (FSB) அதிகாரிகளுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகவும், தன்னை மிரட்டுபவர்களை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்றும் எப்ஸ்டீன் ஒரு மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்திருப்பது அவரது செல்வாக்கின் உச்சத்தைக் காட்டுகிறது.

எப்ஸ்டீன் ரஷ்யாவின் உளவு அமைப்புகளுக்காகப் பணியாற்றியிருக்கலாம் அல்லது அவர்களைப் பயன்படுத்திப் பல உலகத் தலைவர்களைப் பிளாக் மெயில் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது வலுத்துள்ளது. இதனிடையே, "எப்ஸ்டீன் எங்களை உளவு பார்த்தார் என்பது ஒரு நகைச்சுவை" என்று கிரெம்ளின் மாளிகை இதனைத் தள்ளுபடி செய்துள்ளது. இருப்பினும், போலந்து போன்ற நாடுகள் எப்ஸ்டீனுக்கும் ரஷ்ய உளவுத் துறைக்கும் இடையிலான 'ஹனி ட்ராப்' (Honey Trap) தொடர்புகள் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளன. புதினை எப்ஸ்டீன் நேரில் சந்தித்தாரா என்பதற்கு இன்னும் உறுதியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றாலும், ரஷ்யாவின் உயர்மட்ட அதிகார மையங்களில் எப்ஸ்டீனின் ஊடுருவல் இருந்தது தற்போது நிரூபணமாகியுள்ளது.

Previous Post Next Post

Contact Form