GO BACK

விஜய் ரசிகர்களுக்கு அடுத்த 'ஷாக்'! - ஜனநாயகன் ரிலீஸ் இல்லை? விநியோகஸ்தரின் அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் கவலை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கை வாரியத்துடனான (CBFC) மோதல் மற்றும் சட்டப் போராட்டங்களால் திட்டமிட்டபடி ஜனவரி 9-ம் தேதி வெளியாகவில்லை. பொங்கல் ரேசில் இருந்து பின்வாங்கிய இந்தப் படம், பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது கனடா விநியோகஸ்தரான யார்க் சினிமாஸ், "ஜனநாயகன் திரைப்படம் வரும் ஏப்ரல் 30, 2026 வரை வெளியாக வாய்ப்பில்லை" என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் தங்களின் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது சர்வதேச அளவில் விஜய் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

படத்திற்கு 'யு/ஏ' (U/A) சான்றிதழ் வழங்கத் தணிக்கை வாரியம் மறுத்ததைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. தனி நீதிபதி பி.டி.ஆஷா படத்திற்கு உடனடியாகச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட போதிலும், இதனை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. சட்ட ரீதியான இழுபறிகளால் காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க, படக்குழு தற்போது தணிக்கை வாரியத்தின் மறுஆய்வுக் குழுவிடம் (Revising Committee) விண்ணப்பித்துள்ளது. இதனால் படத்தின் வெளியீடு தணிக்கை வாரியத்தின் கைகளிலேயே உள்ளது.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அது விஜய் படத்திற்கு மேலும் ஒரு முட்டுக்கட்டையாக அமையலாம் என்று அஞ்சப்படுகிறது. விஜய் தற்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு அவரது படத்தை வெளியிடத் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறுவது அவசியமாகும். படத்தின் அரசியல் வசனங்கள் அல்லது காட்சிகள் ஆளுங்கட்சிக்கு எதிராக இருப்பதாகக் கருதப்பட்டால், தேர்தலுக்கு முன்பு படம் வெளியாவது மிகவும் கடினம். இந்த அரசியல் சூழலைக் கணக்கில் கொண்டே, விநியோகஸ்தர்கள் படத்தின் வெளியீட்டை மே மாதத்திற்குத் தள்ளிவைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஜனநாயகன் படத்தின் தாமதத்தால் துவண்டு போயுள்ள ரசிகர்களை உற்சாகப்படுத்த, விஜய்யின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான 'தெறி' (Theri) வரும் பிப்ரவரி 20-ம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசிப் படம் என்பதால், இதனைத் திரையில் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே 'ஜனநாயகன்' திரைக்கு வர அதிக வாய்ப்புள்ளதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் புதிய வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது