GO BACK

நாடாளுமன்றத்தில் உச்சகட்ட மோதல்! சபாநாயகர் அறைக்குள் புகுந்து மிரட்டிய காங்கிரஸ் எம்.பி.க்கள்?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் மோதல் முற்றியுள்ளது. சமீபத்தில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் அறைக்குள் காங்கிரஸ் எம்.பி.க்கள் சுமார் 20 முதல் 25 பேர் திடீரென நுழைந்து, அவரை அவதூறாகப் பேசியதோடு பிரதமருக்கும் மிரட்டல் விடுத்ததாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகர் அறைக்குள் கூச்சலிடுவதும், வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் பதிவாகியுள்ளது. "காங்கிரஸ் எம்.பி. ஒருவராலேயே சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், சபாநாயகரை அவர்கள் மிரட்டியது தெளிவாகத் தெரிகிறது. இது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே விடப்பட்ட சவால்" என்று அவர் சாடியுள்ளார். இந்தச் சம்பவத்தின்போது பிரியங்கா காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் அங்கிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய ரிஜிஜு, "சபாநாயகர் மிகவும் மென்மையான மனிதர் என்பதால் அமைதி காக்கிறார்; இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். தான் பேசுவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்று ராகுல் காந்தி கூறுகிறார். ஆனால், சபையின் விதிகளை மீறி யாரும் செயல்பட முடியாது" என்று கண்டனம் தெரிவித்தார். எதிர்க்கட்சியினரின் இத்தகைய நடத்தையால் சபாநாயகர் ஓம் பிர்லா மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாகவும், இதனாலேயே பிரதமர் மோடி அவைக்கு வருவதைத் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், இந்தக் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக மறுத்துள்ளது. சபாநாயகர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும் கூறி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. நாடாளுமன்றத்தின் புனிதத்தைக் காங்கிரஸ் குலைப்பதாக பாஜகவும், ஜனநாயகத்தைக் காக்கவே போராடுவதாகக் காங்கிரஸும் மாறி மாறிப் புகார் கூறி வருவதால், டெல்லி அரசியல் களம் தற்போது போர்க்களமாக மாறியுள்ளது.