GO BACK

BREAKING NEWS : கரூர் கூட்ட நெரிசலில் வழக்கை 12ம் திகதி திருச்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் CBI

திருச்சி: 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய்க்குப் புதிய சட்ட நெருக்கடி உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த த.வெ.க. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில், சிபிஐ (CBI) தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யத் தயாராகிவிட்டது. வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள இந்தக் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் இடம்பெற வாய்ப்புள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த வழக்கை ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ குழுவினர் கடந்த சில மாதங்களாகத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விஜய்யின் 7 மணி நேரத் தாமதமான வருகையே கூட்ட நெரிசலுக்கு முக்கியக் காரணம் என்றும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக விஜய்யிடம் டெல்லியில் இரண்டு முறை பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

தாந்தோணிமலை அரசு சுற்றுலா மாளிகையில் முகாமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள், பலியானவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் என அனைவரிடமும் விரிவான தகவல்களைச் சேகரித்துள்ளனர். இந்த வழக்கில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் டெல்லி சென்று சிபிஐ விசாரணையை எதிர்கொண்டனர். தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த விசாரணையின் அடிப்படையில், விஜயுடன் சேர்த்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது அரசியல் உள்நோக்கம் கொண்டதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. ஒருபுறம் பாஜக விஜய்யைத் தனது பக்கம் இழுக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் சூழலில், மற்றொரு புறம் இந்தக் குற்றப்பத்திரிகை அவருக்கு அரசியல் நெருக்கடியைத் தரும் எனப் பார்க்கப்படுகிறது. வேட்பாளர் விருப்பமனு விநியோகம் தொடங்கி தேர்தல் வேலைகளில் பிஸியாக இருக்கும் விஜய்க்கு, இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கலானது மிகப்பெரிய சவாலாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.