அதிகாலை 12:30 மணியளவில், டேனிலிஷினா (Danylyshyna) வீதியில் உள்ள ஒரு கடையில் முதல் குண்டு வெடித்தது. தகவல் அறிந்து அங்கு முதல் உதவி மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிந்தபோது, சில நிமிட இடைவெளியில் இரண்டாவது குண்டு வெடித்துள்ளது. இதில் விக்டோரியா ஷ்பில்கா (Viktoriia Shpylka) என்ற 23 வயது இளம் பெண் போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே பலியானார். மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தேசிய பாதுகாப்புப் படை வீரர்களும் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த 'டபுள்-டாப்' (Double-tap) தாக்குதல் முறை மீட்புக் குழுவினரை அழிப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வரும் உக்ரைன் உளவுத்துறை, இதில் ரஷ்யாவின் கைவரிசை இருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவித்துள்ளது. போர்க்களத்தில் நேருக்கு நேர் மோத முடியாமல், உக்ரைனின் அமைதியான நகரங்களுக்குள் 'நாசவேலை' (Sabotage) மூலம் குழப்பத்தை விளைவிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சர் இஹோர் கிளைமென்கோ தெரிவித்துள்ளார். அதிநவீன ஐஇடி (IED) வெடிகுண்டுகள் இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளதை தடயவியல் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.
போர் தொடங்கிய காலத்திலிருந்தே லிவிவ் நகரம் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான இடமாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஊருக்குள் ஊடுருவி நடத்தப்படும் இந்தத் தீவிரவாதத் தாக்குதல், மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. லிவிவ் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, சந்தேகத்திற்கிடமான நபர்களைத் தேடும் பணியில் ராணுவம் தீவிரமாக இறங்கியுள்ளது.
