லண்டனின் Bushey பகுதியில் உள்ள 'Vu Lounge' எனும் உணவகத்தில் கடந்த ஆண்டு நடந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் ஜெயந்தன் ராமச்சந்திரன் (Jeyanthan Ramachandran) என்பவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள 25 வயதான டெக்வான் வில்லியம்ஸ், நேற்று (பிப்ரவரி 18) செயின்ட் அல்பான்ஸ் கிரவுன் நீதிமன்றத்தில் (St Albans Crown Court) ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் ஜெயந்தன் உறவினர்கள் எவரையும் பொலிசார் உள்ளே அனுமதிக்க மறுத்த விடையம், பெரும் சந்தேகங்களை எழுப்பி உள்ளது. மேலும் சொல்லப் போனால் உறவினர்கள் என்ன கருதுகிறார்கள் என்றால், பொலிசாரிடம் வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும். அதனால் தங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. பொது வெளியில் இந்தக் கொலை நடந்துள்ளதால், உண்மையில் யார் கொலை செய்தார்கள் என்பது தெரியவில்லை, மேலும் சந்தேக நபர் விடுதலையாக வாய்ப்புகளும் உள்ளது என்று உறவினர்கள் அஞ்சுகிறார்கள்.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, வில்லியம்ஸ் மீது முதலில் கொலை முயற்சி வழக்குப் பதியப்பட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட ஜெயந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் அது கொலை வழக்காக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற நீதிமன்ற அமர்வின்போது, வழக்கின் முன்னேற்றம் குறித்து நீதிபதி ஆய்வு செய்தார். டாலிஸ் ஹில் (Dollis Hill) பகுதியைச் சேர்ந்த டெக்வான் வில்லியம்ஸ், ஜெயந்தன் ராமச்சந்திரனைத் திட்டமிட்டுத் தாக்கினாரா என்பது குறித்துக் காவல்துறை தரப்பில் சேகரிக்கப்பட்ட கூடுதல் தடயங்கள் விவாதிக்கப்பட்டன. உணவகத்திற்குள் நடந்த இந்த வன்முறைச் சம்பவம் அந்த நேரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நேற்று நடந்த விசாரணையின்போது வில்லியம்ஸ் அமைதியாகவே காணப்பட்டார்; அவரது தரப்பு வழக்கறிஞர்கள் வழக்கின் ஆதாரங்களை ஆய்வு செய்யக் கூடுதல் அவகாசம் கோரினர்.
ஜெயந்தன் ராமச்சந்திரன் கொல்லப்பட்ட விவகாரத்தில், உணவகத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் முக்கிய ஆதாரங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஹார்ட்ஃபோர்ட்ஷையர் காவல்துறையினர் இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்தி வருவதோடு, சம்பவத்தன்று அங்கிருந்த சாட்சிகளின் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளனர். உயிரிழந்த ஜெயந்தன் ராமச்சந்திரனின் குடும்பத்தினர் நேற்று நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்தனர். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனத் தமிழ் சமூகத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நேற்றைய விசாரணையைத் தொடர்ந்து, நீதிபதி ஜோனதன் மேன் (Judge Jonathan Mann), டெக்வான் வில்லியம்ஸை ஜூன் மாதம் நடைபெறவுள்ள இறுதி விசாரணை (Trial) வரை விளக்கமறியலில் (Custody) வைக்க உத்தரவிட்டார். ஜூன் மாதம் தொடங்கவுள்ள முழுமையான விசாரணையின் போது, சாட்சிகள் விசாரிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவகங்கள் போன்ற பொது இடங்களில் இத்தகைய கத்திக் குத்துச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து காவல்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளதோடு, குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
