எப்ஸ்டீன் ஆவணங்களில் ட்ரம்ப் மீதான புகார்கள் மறைப்பு? - என்.பி.ஆர் ஆய்வில் திடுக்கிடும் தகவல்!

வாஷிடன் (பிப்ரவரி 25, 2026): அமெரிக்க நீதித்துறை அண்மையில் வெளியிட்ட 35 லட்சம் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் ஆவணத் தொகுப்பில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அடங்கிய சுமார் 50-க்கும் மேற்பட்ட பக்கங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதாக 'என்.பி.ஆர்' (NPR) செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 1980-களில் ஒரு சிறுமிக்கு ட்ரம்ப் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் எப்.பி.ஐ (FBI) நேர்காணல் குறிப்புகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு வரப்படவில்லை என்பது இந்த ஆய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது.

எப்ஸ்டீன் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட வேண்டும் என்ற 'எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டத்தை' (Epstein Files Transparency Act) மீறி நீதித்துறை செயல்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்துப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் கார்சியா, "அதிபர் மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க நீதித்துறை சட்டவிரோதமாக முயன்றுள்ளது" என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து ஜனநாயகக் கட்சியினர் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளை வெள்ளை மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது. எப்ஸ்டீன் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நீதியைப் பெற்றுத்தருவதில் அதிபர் ட்ரம்ப் மற்ற எவரையும் விட அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அபிகாயில் ஜாக்சன் தெரிவித்துள்ளார். நீதித்துறை வெளியிட்டுள்ள ஆவணங்களில் சில "உண்மையற்ற மற்றும் பரபரப்பான" செய்திகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவை அரசியல் காரணங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் ட்ரம்ப் மற்றும் எப்ஸ்டீன் இடையிலான நட்பு குறித்து ஏற்கனவே பல சர்ச்சைகள் உள்ள நிலையில், இந்த புதிய செய்தி மீண்டும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. மறைக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த 50 பக்கங்களில், 1983-ம் ஆண்டு வாக்கில் 13 வயது சிறுமியை எப்ஸ்டீன் மூலம் ட்ரம்ப் சந்தித்தது தொடர்பான விவரங்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. "அதிபர் மீதான குற்றச்சாட்டுகளை மூடிமறைப்பது மிகப்பெரிய ஜனநாயக விரோதச் செயல்" என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் வரும் நாட்களில் அமெரிக்க அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Previous Post Next Post

Contact Form