GO BACK

ரஷ்ய எல்லைக்கு அருகே எஸ்தோனியாவின் இரும்புக்கோட்டை: 600 அதிநவீன பதுங்கு குழிகள் - எல்லையை முற்றுகையிட மெகா பிளான்!

தாலின் (பிப்ரவரி 21, 2026): உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பால்டிக் நாடான எஸ்தோனியா தனது எல்லைப் பாதுகாப்பை முன்னெப்போதும் இல்லாத வகையில் பலப்படுத்தி வருகிறது. ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளில் இருந்து வரக்கூடிய சாத்தியமான அச்சுறுத்தல்களைச் சமாளிக்க, சுமார் 600 அதிநவீன "பாப்-அப்" (modular) ரக பதுங்கு குழிகளை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை (Tender) எஸ்தோனியா அரசு கோரியுள்ளது. "பால்டிக் பாதுகாப்பு வரிசை" (Baltic Defence Line) என்ற திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக எஸ்தோனியா சுமார் 60 மில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளது. இந்த பதுங்கு குழிகள் ஒவ்வொன்றும் 10 வீரர்கள் தங்கும் வசதியுடனும், 152 மிமீ பீரங்கி குண்டுகளின் நேரடித் தாக்குதலைத் தாங்கும் வலிமையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளன. பதுங்கு குழிகள் மட்டுமல்லாமல், "டிராகன் பற்கள்" (Dragon’s teeth) எனப்படும் கான்கிரீட் தடுப்புகள், 40 கி.மீ நீளமுள்ள பீரங்கி எதிர்ப்பு அகழிகள் மற்றும் முள்வேலிகள் மூலம் எஸ்தோனியா தனது எல்லையை ஒரு இரும்புக்கோட்டையாக மாற்றி வருகிறது.

முன்பெல்லாம் நேட்டோ (NATO) அமைப்பின் கொள்கையானது, ஆக்கிரமிப்பு நடந்தால் ஒரு பகுதியை விட்டுக்கொடுத்துவிட்டு பிறகு மீட்டுக்கொள்வதாக இருந்தது. ஆனால், தற்போது "நாட்டின் முதல் மீட்டரில் இருந்தே பாதுகாப்பு" (First meter defence) என்ற புதிய கொள்கைக்கு நேட்டோ மாறியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே எஸ்தோனியா, லாட்வியா மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகள் இணைந்து தங்கள் எல்லைகளில் இதுபோன்ற பாதுகாப்பு வளையங்களை உருவாக்கி வருகின்றன. ரஷ்யாவின் திடீர் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தி, நேட்டோ படைகள் வந்து சேரும் வரை நேரத்தை இழுத்தடிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

தற்போது வரை சுமார் 9 பதுங்கு குழிகள் தென்கிழக்கு எஸ்தோனியாவில் சோதனை அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளன. வரும் 2027-ம் ஆண்டிற்குள் 600 பதுங்கு குழிகளையும் அமைத்து முடிக்க எஸ்தோனிய தற்காப்பு முதலீட்டு மையம் (ECDI) திட்டமிட்டுள்ளது. இது தவிர, எல்லையில் அதிநவீன ரேடார் கண்காணிப்பு அமைப்புகளும், ட்ரோன் தடுப்பு சுவர்களும் (Drone wall) ஏற்படுத்தப்பட உள்ளன. ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தனது இறையாண்மையைக் காக்க எஸ்தோனியா எடுத்துள்ள இந்தத் துணிச்சலான முடிவு சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது.