ஐரோப்பிய நாடுகளின் கூட்டு முயற்சியில் நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்டு வந்த 'எதிர்கால வான் போர் அமைப்பு' (FCAS) திட்டத்தில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, தனது வான்படை பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்காவின் அதிநவீன F-35 ரக ஸ்டெல்த் (Stealth) போர் விமானங்களை கூடுதலாக வாங்க ஜெர்மனி தீவிரமாக முயன்று வருகிறது.
கடந்த 2022-ஆம் ஆண்டு, தனது பழமையான 'டொர்னாடோ' (Tornado) விமானங்களுக்குப் பதிலாக 35 F-35 விமானங்களை வாங்க ஜெர்மனி ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருந்தது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, ஜெர்மனி மேலும் 15 முதல் 50 வரையிலான கூடுதல் விமானங்களை வாங்க அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் ஜெர்மனியின் வான்படையில் உள்ள F-35 ரக விமானங்களின் எண்ணிக்கை 85-ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைந்து 2040-க்குள் ஒரு புதிய தலைமுறை போர் விமானத்தை உருவாக்க 2017-ல் திட்டமிட்டன. இதற்காக சுமார் 100 பில்லியன் யூரோக்கள் செலவிடப்பட இருந்தன. ஆனால், தொழில்நுட்ப உரிமைகள் மற்றும் தலைமைத்துவப் போட்டி காரணமாக பிரான்ஸின் 'டசால்ட்' (Dassault) மற்றும் ஜெர்மனியின் 'ஏர்பஸ்' (Airbus) நிறுவனங்களுக்கு இடையே கடும் மோதல் நிலவுகிறது. இந்தத் திட்டம் தோல்வியடைவதற்கான அறிகுறிகள் தென்படுவதால், ஜெர்மனி மாற்று ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது.
நேட்டோ (NATO) அமைப்பின் கீழ் அணுஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட போர் விமானங்கள் ஜெர்மனிக்கு அவசியமாகும். அமெரிக்காவின் F-35 விமானங்கள் மட்டுமே தற்போது இந்தத் தகுதியைப் பெற்றுள்ளன. உக்ரைன்-ரஷ்யா போர்ச் சூழலில், ஐரோப்பாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஜெர்மனி தனது வான்படையை விரைவாகப் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) சமீபத்தில் அளித்த பேட்டியில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் இயக்கும் போர் விமானங்கள் நமக்குத் தேவையா என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இது பிரான்ஸுடனான கூட்டுத் திட்டத்திலிருந்து ஜெர்மனி விலகுவதற்கான ஒரு வலுவான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
.jpg)