இந்தியாவின் தலைநகர் புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ‘இந்தியா ஏஐ இம்பாக்ட்’ (India AI Impact) உச்சி மாநாடு 2026 தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த கல் கோட்டியாஸ் பல்கலைக்கழகம் (Galgotias University) ஒரு ரோபோ நாயைக் காட்சிப்படுத்தியது. ‘ஓரியன்’ (Orion) எனப் பெயரிடப்பட்ட இந்த ரோபோ நாயை, தங்களது பல்கலைக்கழகத்தின் ‘சிறப்பு மையம்’ (Centre of Excellence) சுயமாக உருவாக்கியதாக அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியை ஒருவர் ஊடகங்களிடம் பெருமையாகப் பேட்டியளித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
சமூக வலைதளப் பயனர்கள் அந்த ரோபோ நாயை உற்று நோக்கியதில், அது சீனாவைச் சேர்ந்த ‘யூனிட்ரீ ரோபாட்டிக்ஸ்’ (Unitree Robotics) நிறுவனம் தயாரித்த ‘Unitree Go2’ என்ற ரோபோ என்பது தெரியவந்தது. ஆன்லைனில் சுமார் 2 முதல் 3 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் இந்தச் சீனத் தயாரிப்பை, இந்தியாவின் கண்டுபிடிப்பு எனப் பல்கலைக்கழகம் தவறாக முன்னிறுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தியாவின் ஏஐ கனவுகளை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், ஒரு சீனத் தயாரிப்பைக் காட்டி அது உள்நாட்டுக் கண்டுபிடிப்பு என்று கூறியது நாட்டிற்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாகப் பலரும் விமர்சித்தனர்.
இந்தச் சர்ச்சை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, உடனடியாக கல் கோட்டியாஸ் பல்கலைக்கழகத்தின் அரங்குக்கு வழங்கப்பட்ட மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மாநாட்டை விட்டு வெளியேறுமாறு அரசு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையில், அந்தப் பல்கலைக்கழகம் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. அதில், அந்த ரோபோவை மாணவர்கள் கற்றுக்கொள்வதற்காகவே கொண்டு வந்ததாகவும், அது தங்களது சொந்தத் தயாரிப்பு என்று ஒருபோதும் உரிமை கோரவில்லை என்றும் கூறியுள்ளது. மேலும், பேட்டியளித்த பேராசிரியை போதிய தகவல்கள் இன்றி ஆர்வக் கோளாறால் தவறான தகவலைக் கூறிவிட்டதாகவும் மன்னிப்புக் கேட்டுள்ளது.
இருப்பினும், இந்தச் சம்பவம் அரசியல் ரீதியாகவும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், "மோடி அரசு ஏஐ துறையில் இந்தியாவை உலக நாடுகளின் முன் நகைப்புக்குரியதாக மாற்றிவிட்டது" எனச் சாடியுள்ளது. இந்தியத் திறமைகளை முன்னிலைப்படுத்த வேண்டிய ஒரு மேடையில் சீனத் தயாரிப்புகளைத் தங்களது தயாரிப்புகள் எனக் காட்சிப்படுத்தியது கண்டிக்கத்தக்கது எனப் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தச் சர்ச்சை காரணமாக, அந்தப் பல்கலைக்கழகம் தற்போது மாநாட்டிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளது.
