அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு கையெழுத்திட்ட 'எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டத்தின்' (Epstein Files Transparency Act) படி, இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால், மேக்ஸ்வெல்லின் வழக்கறிஞர்கள், "நீதிமன்றக் கோப்புகளை எப்போது வெளியிட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு மட்டுமே உண்டு, இதில் நாடாளுமன்றம் தலையிட முடியாது" எனக் கூறி இந்தச் சட்டத்தையே எதிர்த்து நிற்கின்றனர். இதன் மூலம் மிக முக்கியமான ரகசியங்கள் வெளியே வருவதைத் தடுக்க அவர் முயல்வதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே சுமார் 35 லட்சம் பக்க ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த 90,000 பக்கங்களில் இன்னும் பல செல்வாக்கு மிக்க நபர்களின் பெயர்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த ஆவணங்களில் 30-க்கும் மேற்பட்ட சாட்சியங்களின் வாக்குமூலங்கள், மேக்ஸ்வெல்லின் நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் பாலியல் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் அடங்கியுள்ளன. இந்தத் தகவல்கள் வெளியானால், உலகளவில் அரசியலிலும் வர்த்தகத்திலும் உள்ள பல முக்கியப் புள்ளிகளின் முகமூடி கிழிய வாய்ப்புள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
"பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் இந்த உண்மைகள் வெளியே வர வேண்டும்" எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மேக்ஸ்வெல் தரப்போ தனது தனிப்பட்ட உரிமைகள் பாதிக்கப்படுவதாகக் கூறி முட்டுக்கட்டை போட்டு வருகிறது. திங்கட்கிழமை நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள விசாரணையில், இந்த 90,000 பக்க ஆவணங்கள் பொதுமக்களுக்குக் கிடைக்குமா அல்லது மேக்ஸ்வெல்லின் விருப்பப்படி அவை ரகசியமாகவே நீடிக்குமா என்பது தெரிந்துவிடும். உலகமே இந்தத் தீர்ப்பை நோக்கித் திக் திக் நிமிடங்களுடன் காத்திருக்கிறது.
.jpg)