நூக் (பிப்ரவரி 23, 2026): கிரீன்லாந்தில் உள்ள மக்கள் முறையான மருத்துவச் சிகிச்சை இன்றி அவதிப்படுவதாகவும், அவர்களுக்கு உதவ அமெரிக்காவின் பிரம்மாண்டமான மருத்துவக் கப்பலை (Hospital Boat) அனுப்பப்போவதாகவும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். லூசியானா கவர்னர் ஜெஃப் லேண்ட்ரியுடன் இணைந்து இந்தச் சேவையை வழங்கப் போவதாகவும், அந்தச் சிறப்புப் படகு ஏற்கனவே புறப்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ட்ரம்ப்பின் இந்தத் திடீர் அறிவிப்பு சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ட்ரம்ப்பின் கருத்திற்குப் பதிலளித்துள்ள கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பிரடெரிக் நீல்சன் (Jens-Frederik Nielsen), "உங்கள் உதவிக்கு மிக்க நன்றி, ஆனால் எங்களுக்கு இது தேவையில்லை" என்று முகநூலில் பதிவிட்டுள்ளார். கிரீன்லாந்தில் வசிக்கும் அனைத்துக் குடிமக்களுக்கும் உயர்தரமான மருத்துவச் சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாகவும், இது எங்களது சமூகத்தின் அடிப்படை அம்சம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், அமெரிக்காவைப் போல சிகிச்சைக்குப் பணம் செலுத்தும் முறை இங்கு இல்லை என்பதையும் அவர் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே, கிரீன்லாந்து தலைநகர் நூக் அருகே அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் ஒரு வீரருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து பாதுகாப்புப் படையினர் இணைந்து ஹெலிகாப்டர் மூலம் அந்த அமெரிக்க வீரரை மீட்டு, நூக் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அமெரிக்காவிற்கே கிரீன்லாந்து மருத்துவ உதவி தேவைப்பட்ட ஒரு நாளில், ட்ரம்ப் கிரீன்லாந்திற்கு மருத்துவ உதவி வழங்க முன்வந்தது வேடிக்கையாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரத் துடிக்கும் ட்ரம்ப்பின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு டென்மார்க் அரசும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. "சமூக வலைத்தளங்களில் திடீர் அறிவிப்புகளை வெளியிடுவதை விடுத்து, தகுந்த இராஜதந்திர வழிகளில் பேச்சுவார்த்தை நடத்துங்கள்" என்று கிரீன்லாந்து பிரதமர் ட்ரம்ப்பிற்கு அறிவுறுத்தியுள்ளார். கிரீன்லாந்தின் வளங்களையும், அதன் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு ட்ரம்ப் காட்டும் அதீத ஆர்வம், நேட்டோ (NATO) கூட்டணி நாடுகளிடையே ஒருவித சங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது.
