பென்சில்வேனியாவின் பெர்க்ஸ் கவுண்டி போன்ற பகுதிகளில், ஒரு பழைய கிடங்கு $87.4 மில்லியனுக்கு விற்கப்பட்ட பிறகே, அது ICE வசமாகியுள்ளது என்பது உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரியவந்துள்ளது. "எங்கள் ஊரில் என்ன நடக்கிறது என்றே எங்களுக்குத் தெரியவில்லை" என உள்ளூர் கவுன்சிலர்கள் குமுறுகின்றனர். பொதுவாக ஒரு பெரிய கட்டடம் கட்டப்படும்போது உள்ளூர் விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும், ஆனால் இது மத்திய அரசின் நேரடித் திட்டம் என்பதால், உள்ளூர் நிர்வாகத்தின் எந்த அனுமதியும் இன்றி ICE இந்த வேலைகளைச் செய்து வருகிறது.
இந்த மையங்கள் அமைக்கப்பட்டால், அந்தப் பகுதியில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படும் என்றும், உள்ளூர் வரி வருவாய் பாதிக்கப்படும் என்றும் மக்கள் அஞ்சுகின்றனர். ஜார்ஜியாவின் 'சோஷியல் சர்க்கிள்' (Social Circle) என்ற சிறிய நகரத்தின் மக்கள் தொகையை விட, அங்கு அமைக்கப்பட உள்ள தடுப்பு மையத்தில் அடைக்கப்பட உள்ளவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகம். இதனால் குடிநீர், கழிவுநீர் மற்றும் மின்சார வசதிகள் பாதிக்கப்படும் என மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். "இது மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடம் அல்ல" என மனித உரிமை ஆர்வலர்களும் எச்சரிக்கின்றனர்.
நியூயார்க், மாசசூசெட்ஸ் போன்ற சில மாகாணங்கள், இதுபோன்ற புதிய தடுப்பு மையங்களைத் தொடங்கத் தடை விதிக்கும் சட்டங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளன. சில இடங்களில் தனியார் உரிமையாளர்கள், மக்களின் எதிர்ப்பைக் கண்டு ICE அமைப்பிற்குத் தங்கள் இடங்களை விற்க மறுத்து வருகின்றனர். ட்ரம்பின் 'மெகா நாடு கடத்தல்' (Mass Deportation) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மையங்கள் பார்க்கப்படுவதால், வரும் நாட்களில் அமெரிக்காவின் பல நகரங்களில் மக்கள் போராட்டங்கள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
