ஈரானில் அணுசக்தி விவகாரங்கள் குறித்த அமெரிக்காவின் அழுத்தம் ஒருபுறமிருக்க, அந்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் மாணவர் தலைமையிலான அரசு எதிர்ப்புப் போராட்டங்களும் இரண்டாவது நாளாகத் தொடர்ந்து வருகின்றன. இத்தகைய போராட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு இந்தியர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தங்களது பாதுகாப்பு மற்றும் பயண ஆவணங்களை (Passport and ID) எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 10,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தற்போது ஈரானில் வசிப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அவசர கால உதவி எண்கள்: தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம், இக்கட்டான சூழலில் உள்ள இந்தியர்களுக்கு உதவ பிரத்யேக அவசர கால உதவி எண்களை (Helplines) அறிவித்துள்ளது. +98 912 810 9115, +98 912 810 9109, +98 912 810 9102 மற்றும் +98 993 217 9359 ஆகிய எண்கள் மூலம் இந்தியர்கள் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளலாம். மேலும், இணையதள முடக்கம் ஏற்பட்டால், இந்தியாவில் உள்ள உறவினர்கள் மூலமாக இந்தியத் தூதரக இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) ஜெனீவாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அணுசக்தி தொடர்பான முக்கியப் பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன. இந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னரே எச்சரித்துள்ளார். இத்தகைய நிச்சயமற்ற சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்தியா இந்தத் தீவிரமான பயண எச்சரிக்கையை விடுத்துள்ளதாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
